பக்கம் எண் :

39


கரும்பு முளைவிடும் முன்பிருந்தே          

     காத்து நின்றிடும் எறும்பெனவே        

அரும்பு கட்டுமுன் மலருக்காக            

      அலைந்து திரிந்திடும் வண்டெனவே      

விரும்பும் மைந்தனைக் காண்பதற்கே       

     வெகுவாய்த் துடித்திட்ட யாக்குபுள்ளம்    

பெருமை கொண்டிட எழில்மகனைப்       

     பெற்று மகிழ்ந்தனள் ராஹிலாவே!        

 

மின்னும் தாரகைச் சுடரெனவே          

  மிளிரும் சிறுவிழி சுழற்றுகின்ற      

அன்புச் செல்வனை அருகணைத்தே      

     ஆசைப் பெருக்குடன் முத்தமிட்டுப்     

பண்பு மிகுந்திட யூசுபென்று            

     பாரில் நிலைத்திடும் பெயருமிட்டே     

என்றும் காணா இன்பமுற்றே           

     இதயம் களித்தனர் நபியாக்கூபே!       

 

நீல வான்கடல் நீந்துகின்ற              

     நிறைமதி தனது இல்லவானில்          

சீலர் யூசுபாய்ப் பிறந்ததென்று           

     சிந்தை குளிர்ந்திடும் ராஹிலாவை       

ஞாலம் வியந்திடும் எழில்படைத்த        

     நற்குலம் பூத்த மணி யூசுப்            

காலம் முழுவதும்நினை வில்வைக்கக்      

      கண்கள் மலர்ந்துதம் நன்றிசொன்னார்!    

 

என்றும் வாடிடாத் திருமலர்கள்          

     எழுப்பும் சுகந்தமே அத்தனையும்      

குன்றச் செய்திடும் நறுமணத்தைக்        

     கொண்டு பிறந்ததன் திருமகனை  

அன்பில் விளைந்த நல்லமுதை          

     அள்ளி அணைத்தெழில் நுதல்நுகர்ந்தே

இன்பம் சுவைத்திடும் ராஹிலாவை       

     எழில்மிகும் யூசுப் தழுவினரே!
 

  - - x - -