பக்கம் எண் :

41


தனைப்பெற்ற தாயாரின் கருணை நெஞ்சில்     

    சலுகையுடன் முகம்புதைத்து விம்மு கின்ற    

மனைவிளக்கின் நீர்விழியைத் துடைத்து விட்டு   

    "மாமணியே ஆண்மகன்நீ அழாதே!" என்றாள்  

"துணைவேண்டி விளையாடத் தங்கை கேட்டுத்       

    துயர்கொண்டு அழுகின் றான்" எனச் சிரித்தார்;

"நினைக்காதீர் அதற்குள்ளே!" என்றாள் ராஹில்,  

    "நினைத்தாலே இனிக்கிறது!" என்றார் யாகூப்.    

 

விழிமூடி நாணத்தால் முகம்சி வந்து            

    "விளைநிலத்தைப் பண்படுத்த வேண்டும்’ என்றாள்

மொழிகேட்ட யாக்கூபு முறுவ லித்தே         

    ‘முற்றுமிதை ஒப்புகிறேன் கண்ணே!’ என்றார்.

"எழில்மிக்க மைந்தர்களைப் பெற்றுத் தந்தால்     

    இனிக்காமல் கசந்திடுமோ?" என்றாள் ராஹில்

"பொழில்நடுவில் ஒருமலரை நுகர்ந்த பின்னர்,     

    புதுமலரை விரும்புவது தவறோ?" என்றார்.   

- - x - -