சென்றேன் என்றால் திடுக்கிட வேண்டாம்! உன்றனின் தந்தை உன்னத யாக்கூப் என்றனை விடவும் ஏற்றமாய் வளர்ப்பார்! கண்களுக் கிமையாய் அண்ணன் மார்கள் உன்மனம் போன்றே உவப்புடன் காப்பார்! கண்ணே யூசுப் கலங்கிட வேண்டாம்!" என்றாள் ராஹில்; இதுவரை மறைந்து நின்ற யாக்கூப் நெடுமூச் செறிந்து பாய்ந்து சென்று பறித்தார் யூசுபை அத்துடன்...... "இந்நாள் வரையிலும் உன்னுடல் நோயினை என்னிடம் மறைத்தே இருந்ததேன் ராஹில்? பிள்ளைக்(கு) உன்நிலை சொல்லிடத் துணிந்தநீ எள்ளள வாயினும் என்னிடம் இயம்பிடக் கள்ளமேன் கொண்டனை?" என்றனர் யாக்கூப் கேட்டதும், ‘கள்ளமேன்?’ என்றிடும் கணவரின் வார்த்தையில் உள்ளத் துடிப்பினை உணர்ந்த ராஹிலா "அண்ணலே என்குறை அனைத்தும் மறந்து புன்னகை பூக்கும் புதல்வனைப் பேணுவீர்! இந்நாள் வரையிலும் என்னுடற் பிணியினைச் சொன்னது இலையெனத் துயர்ப்படும் தோன்றலே, சொல்வதால் என்பிணி தொலைந்திடும் என்றிடில் சொல்லிட முந்துவேன், சொல்லிடில், தங்களின் இதயம் வருந்திடும் என்பதால் மூடினேன்" என்றனள் கேட்டதும் ஏங்கினர் யாக்கூபே! |