பக்கம் எண் :

44


இந்நிலை.......

உணர்ந்ததே போன்று ஒளிமிகும் யூசுப்

"அம்மா" என்று அழைப்பதைக் கேட்டுத்

தந்தையர் யாக்கூப் சிந்தை வலித்தது!

சேயின் அழைப்பைச் செவியினில் ஏற்ற

தாயின் சிந்தைதன் நோயினை மறந்து

முழுமதி எனவே முகமதி ஒளிரச்

செழுமதி படைத்த செல்வன் யூசுபை

கூர்ந்து நோக்கிக் கூறுவாள் ராஹில்

"ஊர்ந்தென் னருகில் ஓடிவா!" என்று.

 

தந்தையின் அணைப்பைச் சட்டென விலக்கி,

தாயின் அழைப்பைத் தலைமேற் றாங்கி,

துள்ளித் தவழும் பிள்ளை யூசுபை

அள்ளி யணைத்து ஆயிர முத்தம்

சொரிந்த ராஹிலா துணைவரை அழைத்தே

"இந்நாள் முதலாய் என்னிலும் மேலாய்க்

கண்மணி யூசுபைக் கவனமாய்க் காப்பீர்!"

என்றதும் ராஹிலா இருவிழி

சுழற்றி விழித்திடக் கழன்றது உயிரே.
 

- - x - -