பக்கம் எண் :

46


[ஐந்தாண்டு வரையிலும் தன்சோதரியிடம் அருமையாய் வளர்ந்த      யூசுபை, மீண்டும் தம்மிடம் ஒப்படைக்கும்படி யாக்கூப் வேண்டுகிறார்.]

 

சோதரியின் துயர்

இயல்-6

 

தன்னரும்   மனைவி பிரிந்திடச் செய்த

    சாவினைச் சகித்திட்ட யாக்கூப்

உன்னத மகனார் யூசுபைத் தன்னின்

    உடன்பிறந் தாளிடம் விடுத்து

பன்னெடு நாட்கள் பெருந்துயர் தாங்கிப்

    பாலகன் யூசுபை மீண்டும்

தன்னிடம் சேர்க்கச் சோதரி இடத்தில்

    தாழ்மையாய் வேண்டிநின் றாரே!

 

இன்னும்சில் லாண்டு தன்னிடம் யூசுபை

    இருத்திட விரும்பிய அவளோ

தன்னுடைச் சோதரர் யாக்கூபை அணுகித்

    "தாயினும் மேலதாய் வளர்க்கும்

என்னிடம் யூசுப் இருப்பதில் ஏதும்

    இன்னலைக் கண்டது முண்டோ?

இன்னுமீ ராண்டு என்னிடம் யூசுப்

    இருப்பது நன்றெ’னச் சொன்னாள்.

 

"மீண்டுமோர் நாளும் யூசுபைப் பிரிந்து,

    வாழ்ந்திடில் வளர்துய ரரவம்

தீண்டிஎன் உயிரைக் குடிப்பது திண்ணம்

    சிந்தையில் உலவிடும் யூசுப்

ஆண்டுஐந் தாயுன் அன்பினில் வளர்ந்தான்

    ஆதலால் சோதரி இனிமேல்

நான்வளர்த் திடவே முடிந்திடும்?" என்றே

    நாட்டத்தை விளக்கினர் யாக்கூப்!