பக்கம் எண் :

47


துயரினை ஏந்திச் சுகத்தினை; இழந்து

    சோதரர் யாக்கூபின் மகனை

உயிரினும் மேலாய், உடலினோர் அமைப்பாய்

    உவப்புடன் வளர்த்துளம் மகிழ்ந்து

பயன்பெறும் காலம் பிரிக்கும்யாக் கூபைப்

    பகைவராய்க் கருதிய அவளோ

நயமுடன் உரைத்தாள் "யூசுபை அழைத்து

    நாளைக்கே வருகிறேன்!" என்று.

 

சோதரி தமக்கே ஆதர வாகச்

    சொல்லிடும் வார்த்தையை நம்பி

வேதனை மறந்து யூசுபை அருகில்

    விளையாடச் செய்வதாய்க் கருதி

சோதனை அனைத்தும் வென்றதாய் நினைத்துச்

    சோதரி பெருங்குணம் மதித்து

சாதனை புரிந்த வீரனைப் போலச்

    சாந்தியை அடைந்தனர் யாக்கூப்!