பக்கம் எண் :

48


குழந்தை கூறும் நெறி

இயல்-7

 

அருமை யூசுபை நீராட்டி

     அழகுக் கழகு செய்வித்தே

உரிமைக் குரிய தந்தையிடம்

     ஒப்பித் திடவே உடன் கூட்டி

வரும்தம் சோதரி எதிர்சென்று

     மைந்தன் யூசுபை அருகணைத்தே

உருகிக் கண்ணீர் உதிர்க்கின்ற

     உணர்ச்சி யடைந்தார் யாக்கூபே!

 

கண்ணீர் கண்ட சோதரியாள்

     கடுஞ்சினங் கொண்டு யாக்கூபை

"எண்ணம் போன்று யூசுபை

     என்னிடத் திருந்து பெற்றபினும்

கண்ணீர் வடித்து நிற்பானேன்?

     களிப்பில் கலக்கம் சேர்ப்பானேன்?

என்னிலை யன்றோ இது!" என்றாள்;

     "இன்பக் கண்ணீர்!" எனச் சொன்னார்.

 

காலை அரும்பும், கடும்பகலும்

     கவ்வித் தகிக்கும், மனங்கவரும்

மாலை மலரும் ஒளிமறைந்து

     மயக்கும் இரவின் இருள்சூழும்

காலை இன்பம் கண்டதனால்

     கடும்பகல் துன்பம் மறப்பதுவோ?

நாளை நடப்பை அறியாநாம்

     நம்பும் இன்பம் கன"வென்றாள்!