மதியின் சதி இயல்-8 மறுநாட் காலை மைந்தனுக் குயர்ந்த நறுமணம் பூசி நல்லுடை உடுத்தி இருந்தார் யாக்கூப் இந்நே ரத்தில் அருமைச் சோதரி அவசரக் கோலமாய் வருவதைக் கண்டு பெருந்திகில் கொண்டு அருகில் சென்று அமரச் செய்து "பெருந் துயர் காட்டிப் பீதியால் வெருண்டு வருந்துதல் ஏனோ? வளர்த்த யூசுபைப் பிரிந்ததன் விளைவோ? அறிந்திடச் சொல்வாய்! பிரிவுத் துயரம் பெரிதும் வருத்திடில் திரும்பவுன் னில்லம் செல்லா திங்கே இருந்து வாழலாம்!" என்றார் யாக்கூப், தன்னரும் சோதரர் பொன்னுரை கேட்டதின் பின்னரும் ஏதும் பேசா திருந்தனள். புன்னகை பூத்திடும் கண்மணி யூசுபு அன்புடன் மாமியின் அருகினிற் சென்று "நின்துயர் யாதென என்னிட மாவது சொன்னால் போதும்!" என்றார் பணிவாய். "எங்களின் தந்தையர் இஸ்ஹாக் எமக்குப் பங்கிட் டளித்த பல்விதப் பொருளில் எங்கணும் கிடைக்கா இடையணி ஒன்றைத் தங்களின் சின்னமாய்த் தந்தார் எனக்கே. |