பக்கம் எண் :

53


என்றார் யாக்கூப். "எனக்கு மட்டும்

இதுதெரி யாதா?" என்று நகைத்தாள்!

"அது சரி, இதற்கு அளிக்கும் தண்டனை

"எதுவெனச் சொல்வாய்" என்றார் யாக்கூப்.

 

"பொதுவினில் களவு புரிந்தவர் தம்மை

அடிமை யாக்குவதை அறியார் யாரோ?

கடிதினில் யூசுபை அடிமையாய்த் தாரீர்"

என்றாள், கேட்ட யாக்கூப் சிரித்தார்.

 

மாசறுங் குழந்தை யூசுபின் இடத்தில்

பாசங் கொண் டதனால் பறித்திட நினைத்து,

கள்வனாய்க் காட்டிக் காலம் முழுவதும்

செல்வனை அடிமை செய்திட முனைந்து

 

விதியின் வலிமையை முழுவதும் மறந்து

மதியின் பலத்தால் சதியினைச் செய்த

சோதரி இடத்தில் சொல்லுவார் யாகூப்

"மாதவ மைந்தன் மாமணி யூசுப்

மீதினில் என்னிலும் மிகுந்த அன்பினால்

பாதகச் செய்கையைப் பண்ணிடத் துணிந்தனை!

 

ஆயினும் உன்னிடம் அருமை யூசுபை

தாயினும் மேலாய்ச் சகிப்புடன் தருகிறேன்"

என்றார். கேட்டதும் இதயம் அதிர்ந்து

நின்றாள். யாக்கூப் சென்றார் அப்பால்.

"என்னுயிர் போம்வரை என்னிடம் இருப்பாய்

உன்னைப் பிரிந்திட ஒண்ணா தென்னால்"

என்றாள், யூசுபை எடுத்துச் சென்றாள்.