வஞ்சியர் கண்வலை விழுந்தனன், இதயம் வாரி இழுத்திடும் வண்ணம் நெஞ்சினை நிமிர்த்திப் பார்வையை எதிரில் நிறுத்தியே செல்படை வீரர் அஞ்சுதல் அறியா ஆண்மையை உணர்ந்தே அதிர்ந்திடும் போதினில் கதிரோன் மஞ்சட்பொன் னொளியை மன்னவர் தைமூஸ் மாளிகை முழுவதும் இறைத்தான். விழிகளைக் கூசும் பெருஞ்சுடர் வீசி வெந்திடத் தகித்திடும் கதிரோன் பொழிலிடைப் புகுந்து குளிர்முகம் அடைந்து பூரண மதியமாய் மாறி எழிலொளி வீசிஇலங்கிடக் கண்டே "எப்படி மாறினாய்?" என்றான். பொழிலினைக் காட்டி "மன்னர் தைமூஸின் புதல்வியின் பார்வையால்!" என்றான். "கதிரவன் உனையே மதியமாய் மாற்றும் கண்ணொளி படைத்தவள் முகத்தை எதிரினில் காணும் வழிஎனக் குளதோ?" என்றதும் கதிரவன் சிரித்தே’ "அதிபதி தைமூஸ் திருமகள் சுலைகா அருகினில் நெருங்கலா காதே! மதிலினைக் கடந்து சோலையின் நடுவில் மறைந்துநீ காணலாம்" என்றான். - - x - - |