பக்கம் எண் :

6


வரலாறுகளோடு இதையும் ஒன்றாக அவன் சொல்லிக் காட்டவில்லை; "ஏனைய வரலாறுகளை விடவும் இது அழகான வரலாறென்ற" முன்னுரையோடு சொல்லிக் காட்டுகின்றான்.  

   இப்படிச் சொல்வதன் மூலம் இதன் அழகை மட்டும் அனுபவித்துவிட்டு, அதன் மூலம் பெற வேண்டிய படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாமலிருந்து விடுவோமோ என்ற சந்தேகத்தில் "இந்த வரலாற்றில் படிப்பினைகள் பலவும் இருக்கின்றன" என்பதையும் சுட்டிக் காட்டுகின்றான்.  

   சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த நபி யூசுப் (அலை) அவர்களின் இந்த வரலாற்றினை 1900 ஆண்டுகளுக்கு முந்தைய பைபிளும் சொல்கிறது; இதற்கும் 550 ஆண்டுகளுக்குப் பிந்திய குர்ஆனும் கூறுகிறது.

   அழகும் படிப்பினையும் நிறைந்த இந்த வரலாற்றினை முறைப்படுத்தி-வரிசைப்படுத்தி அமைப்பதற்கு, குர்ஆன், பைபிள் கூறும் தகவல்களையும்; இவற்றினை ஆராயும் விரிவுரையாளர்களின் விளக்கங்களையும், வரலாற்றாசிரியர்களின் முடிவுகளையும் வைத்தே எழுத வேண்டியதாயிற்று.  

   இப்படித் தொகுக்கப்பட்ட வரலாற்றினைக் காவிய வடிவில் அமைக்க வேண்டிய பணி மிகக் கடுமையானது. இதிலுள்ள பாத்திரங்களின் தரம் குறையாமலும், வரலாற்றுச் சம்பவங்கள் வேறுபடாமலும், கவிதைச் சுவை கெடாமலும் நான் மேற்கொண்ட முயற்சி சாதாரணமானதல்ல. சான்றுக்கு ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்.