பக்கம் எண் :

61


கள்ளன் நுழைந்தான்

இயல்-14

 

கண்சிமிட்டும் தாரகைகள் சூழ்ந்தி ருக்கக்

     களைப்பகற்றும் பூங்காற்றுச் சுழன்ற டிக்க

விண்முகட்டின் நடுவினிலே எழுந்த திங்கள்

     விழிபறித்தே ஏதேதோ மொழியு ரைக்கப்

பெண்ணரசி சுலைகாவின் இதழின் மின்னும்

     புன்னகையால் திங்களொளி மங்கச் செய்து

கண்மலரின் இதழ்குவித்து நகைநிறுத்திக்

     கனகமணி மஞ்சத்தே துயிலச் சென்றாள்.

 

தன்னரசி கண்ணயரச் செல்லக் கண்ட

     தாதியரின் தலைவிசிறு சைகை செய்யப்

பொன்னிழையால் நெய்தெடுத்த பட்டுப் போர்வை

     போர்த்துதற்கே ஒருதோழி எடுத்து வந்தாள்,

வண்ணஒளி சிந்துகின்ற மயிலிறகால்

     வாஞ்சையுடன் மறுதோழி விசிறி நின்றாள்,

இன்னொருத்தி நறும்புகையைச் சுழல விட்டாள்.

     எழிலரசி சுலைகாதன் முகம்ம லர்ந்தாள்!

 

முகம்மலர்ந்த சுலைகாவைத் துயில விட்டு

     முறுவலிக்கும் அவள்முகத்தை உற்றுநோக்கி

அகம்மலர்ந்த தோழியர்கள் விலகிச் செல்ல

     அனைத்துயிரும் இரவுத்தாய் மடியில் தூங்கிச்

சுகங்காணும் நேரத்தில் விண்மீன் மட்டும்

     தூங்காமல் சுலைகாவை நோக்கி நிற்க

நகர்காக்கும் காவலரும் உணர்வி ழக்கும்

     நள்ளிரவுக் குளிர்காற்றுத் தவழக்கண்டான்.