கருங்குவளைக் கண்மூடிக் கிடந்த அந்தக் கட்டழகி சுலைகாவின் இதயக் கண்கள் சுருங்காமல் விழித்தெதையோ கண்டதே போல் துடிதுடித்துப் பரபரக்க எழுந்து நின்றே அருகிருக்கும் விளக்கினொளி தூண்டி விட்டே அப்பாலும் இப்பாலும் சுற்றிப் பார்த்தாள். ஒருவருமங் கில்லாமல் இருக்கக் கண்டே உடல்சிலிர்க்கத் தோழியரை அழைக்கலானாள். "யாரங்கே? எல்லோரும் எங்குச் சென்றீர்? யாரோஓர் கள்வனிங்கு நுழைந்து விட்டான்! பாரங்கே, எங்கேனும் பதுங்கி நிற்பான்!" பதைபதைக்கும் சுலைகாவின் சப்தம் கேட்டு "யாரிங்கே துணிச்சலுடன் வந்தான்?" என்று யாரோஓர் தோழிகுரல் கொடுத்து வந்தாள். "பாரிங்கே, பாரங்கே, எங்கும் பாராய் பார்த்துவிடில் உடன்பிடித்து வாராய்" என்றாள். சுலைகாவின் சொற்கேட்டே அங்கு மிங்கும் சுழன்றோடித் தோழியர்கள் சிலரைக் கூட்டி கலைக்கூடம், வெளிமாடம், நடன சாலை, கண்காட்சிப் பொருளில்லம் யாவும் தேடித் தலைவாசல் வரை வந்தார் அதுவும் மூடித் தாழிட்டே இருப்பதையும் பார்த்து விட்டு சுலைகாமுன் னோடிவந்த தோழி யர்கள் துரிதமுடன் அபாயமணி அடிக்கச் சொன்னார். "இதுவேளை அபாயஒலி எழுப்ப வேண்டாம் எழுப்பிவிடில் காவல்புரி வீர ரெல்லாம் பொதுவாக மிரண்டோடி வருவார், வந்தும் போய்விட்ட கள்வனையே பிடிக்கப் போமோ? |