பதுங்கிநின்று பிடித்திட்டார் எனினும் என்னைப் பார்ப்பதற்கும் அனுமதியார், அதுவு மன்றி வதைத்திடுவார் அவனுடலைச் சிதைத்தொ ழிப்பார். வடிவழகன் துயர்படயான் சகியேன்"என்றாள்; கள்வனுக்கே இரங்குகின்ற சுலைகா நெஞ்சக் கருத்தினையே அறியாதத் தோழி யர்கள் "நள்ளிரவில் கொள்ளையிடும் கள்வ னுக்கா நாமிரக்கம் காட்டுவது?" என்று கேட்க, "கள்வனென வந்தாலும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளுகின்ற ஆணழகன், அவனைக் கண்டால் உள்ளமதை நீங்களுமே இழந்து போவீர் உண்மைஇது!" எனச்சுலைகா உரக்கச் சொன்னாள். இளவரசி எண்ணத்தைப் புரிந்து கொள்ள இவ்வளவு போதாதா தோழி யர்க்கு! ‘கலகலெ’னச் சிரித்திட்டார் குறும்பாய் நோக்கிக் "கனவுக்கா இத்துணைஆர்ப் பாட்டம்?" என்றார். இளவரசி சுலைகாவோ முகம்சு ழித்து "எல்லாமும் உண்மையடி; கனவே அன்று! களவெடுக்க வந்ததுவும், கண்டேன் என்று கணப்பொழுதில் மறைந்ததுவும் கண்முன்" என்றாள். "கண்முன்னே கணப்பொழுதில் மறைந்தா னென்றால் கைதேர்ந்த கள்வனோ?" என்றா ளொருத்தி. இன்னொருத்தி "மந்திரமும் கற்றோ னாக இருப்பானோ?" எனக்கேட்டாள்; மற்றோர் தோழி "பெண்ணொருத்தி துயிலுமிடம் துணிந்து செல்வோன் பெருங்காமக் காதகனாய் இருப்பா" னென்றாள்! "என்னவென இருந்தாலும் அவனைக் காண என்னிதயம் விரும்பும்"எனச் சுலைகா சொன்னாள். |