விழிஅழகி சுலைகாவின் விருப்பம் கேட்டு வியப்புற்றுத் தோழியர்கள் திடுக்கம் கொள்ளக் கிழத்தாதி அங்குவந்தாள். நடந்த வற்றைக் கேட்டறிந்தே "அத்தனையும் கனவே!"என்றாள். மொழிகேட்ட சுலைகாவோ முகம் சிவந்து முணுமுணுத்துக் கிழத்தாதி தனைவி ழித்து "விழியாலே கண்டதற்கும் கனவி னுக்கும் வேற்றுமைகள் யானறிவேன்!" எனஉ ரைத்தாள். "உண்மையிலே கனவன்று நனவே என்றால் உங்கள்முகம் கண்ட அவன்ஓட மாட்டான். அண்மையிலே நெருங்கிடுவான் உயிர்போனாலும் அழகொளிரும் மலரடியில் வீழ்ந்து சாவான். கண்படைத்த துறவியையும் கலங்கவைக்கும் கட்டழகின் முழுவடிவைக் கண்ட பின்னும் சென்றுவிட்டான் என்றக்கால் கனவே யாகும்" தெளிவாகக் கிழத்தாதி விளக்கிச் சொன்னாள். "கொண்டவளே தன்கணவன் என்னும்போது கூடிநிற்போர் அல்லவெனச் சொல்வ தேபோல் கண்டவளே கனவல்ல என்னும்போது காணாத நீங்கள்வெறுங் கனவென் கின்றீர்! மண்டலமே மயங்குகின்ற எழில்ப டைத்த வடிவழகன் எனைப்பார்த்தான்; நானும் பார்த்தேன்! உண்மைதான் ஒப்பவிலை எனினும் வீணில் உபதேசம் செய்யாதீர்!" எனக்க டிந்தாள். "ஏதுக்கு இங்கின்னும் நிலையா யுள்ளீர்? எல்லோரும் சென்றிடுவீர்!" என்றி ரைந்து, காதுக்குள் சுலைகாவுக் கேதோ சொல்லிக் கைபிடித்துக் கிழத்தாதி அழைத்துச் சென்றே ஏதுக்கும் தனிமையிலே இருங்கள், மீண்டும் இங்கேயவர் வந்தாலும் வரலா"மென்று தோதுக்குத் தக்கபடிச் சொல்லி விட்டுத் தோழியரைப் போன்றவளும் பிரிந்து சென்றாள். - - x - - |