பக்கம் எண் :

65


ஏமாற்றம்

  இயல்-15  

 

வருவான் வருவான் எனநம்பி

     வழிமேல் வைத்த விழிசற்றும்

திருப்பா திருந்தாள் நெடுநேரம்;

     திடுமென் றெழுந்து சோலையிடை

ஒருக்கால் இருப்பான் எனஎண்ணி

     ஓடிப் பார்த்தாள், மனம்சோர்ந்து

வெறுப்பாய் மஞ்சம் சேர்ந்தாளே,

     விழிகள் மூடிச் சாய்ந்தாளே!

 

படுத்தாள் எனினும், அவளுள்ளம்

     படுத்துக் கிடக்க விடவில்லை!

தொடுத்த ஆசை நினைவாலே

     துவண்டு புரண்டு களைத்தாளே!

அடுத்து ஏதோ ‘சலசல’க்கும்

     அரவம் கேட்டே ஆவலுடன்

துடித்தே எழுந்தாள் காற்றல்லால்

     சுற்றிலும் ஏதும் காணவில்லை!

 

ஏக்கம் நிறைந்த சுலைகாவின்

     இருவிழி சிவக்கத் துயரூட்டித்

தூக்கமும் அவளைக் கைவிட்டுத்

     தொலைந்தது எங்கோ? ஒருகாலை

ஆக்கம் மிகுந்த அவனேதான்

     அதையும் கவர்ந்து சென்றனனோ?

நோக்கம் எதையும் சொல்லாமல்

     நொடியில் மறைந்ததை நினைவுற்றாள்.