"சொன்னால் மறுப்பாள் எனநம்பிச் சொல்லும் துணிவை இழந்தானோ? பின்னால் வரலாம் எனஎண்ணிப் பேசா தகன்று போனானோ? தன்வாய் மொழியை என்னுள்ளம் தாங்கா தென்றே நினைத்தானோ? கண்வாய் பொத்திக் கிடந்தவளைக் கவர்ந்து செல்லவும் பயந்தானோ?" "கன்னம் வைத்தவன் பொருளெதையும் கைப்பற் றாமல் செல்வானோ? எண்ணம் ஏதும் இல்லாமல் இங்கே அவனேன் வரவேண்டும்? கண்ணும் கண்ணும் பேசியபின் கனிவாய்ச் சொற்கள் வேண்டாவோ? இன்னும் பற்பல எண்ணத்தால் இதயம் துடித்தாள் சுலைகாவே! சோர்ந்து கிடக்கும் சுலைகாவின் துயரம் காணச் சகியாமல் ஊர்ந்து சென்றனள் இரவுத்தாய்! ஒளியைப் பெற்றது கீழ்வானம்! தேர்ந்த முத்தாய்ப் பனித்துளிகள் சிரிக்கும் மலரில் மின்னிடவே பார்த்து வியந்த புள்ளினங்கள் பண்ணிசை பாடி மகிழ்ந்தனவே! தூங்கி எழுந்த தோழியர்கள் சுலைகா மஞ்சம் தனைச்சூழ்ந்து வீங்கி இருக்கும் முகம்கண்டு வெகுவாய்த் துயரம் அடைந்தனரே! |