"சந்திரன் சூரியன் தாரகை அனைத்தும் தாளினில் பணிவதாய்ச் சொல்லித் தந்தையர் யாக்கூப் மதிப்பினில் உயரும் தந்திரம் மிகுபயல் யூசுப் சிந்தையைப் பிளப்பதும் தகு"மென ‘லாவான்’ சீற்றமாய்ச் சாற்றிடும் போதில் "அந்த வேலை நமக் காகாது" என்றே அறநெறி கூறினான் ‘யஹூதா.’ சோதரன் ‘யஹூதா’ சொல்லறம் கேட்டுத் துடிதுடித் தெழுந்தனன் ‘ரூபில்’ "பாதகன் யூசுப் ‘பாதத்தைப் பணியும் பதினொரு தாரகை’ என்று சோதரர் நமையே சுட்டினான் அவனின் துடுக்கினை ஒடுக்குதல் முறையே ஆதலா லினியும் பாம்பினுக் கிரங்கல் ஆகாது" என்றல றினனே! அலறிடும் ‘ரூபில் அருகினில் நின்றே அனைத்தையும் ‘ரூபாலூன் ஏற்றே "உளறிடும் யூசுப் கனவினை நமக்கும் உரைத்திட மறுத்தனர் தந்தை களங்கமே கொண்டா ராதலா லினிமேல் காரியம் யாவையும் அவர்க்கு விளங்கிடா வண்ணம் யூசுபைக் கடத்தி வேதனைப் படுத்துவோம்" என்றான். - - x - - |