பக்கம் எண் :

74


மாசறும் யூசுபின் மாண்புறும் நடத்தையைப்

பேசுவர்; இனித்திடும் பேச்சினைப் புகழுவர்!

தேசுறும் தம்பியின் சிரிப்பெழில் கூறியே

வீசினர் வலையினை; வீழ்த்தினர் தந்தையை!

 

தூற்றிடு கின்றவர் சூழ்ச்சியைக் காணலாம்

மாற்றியே சொல்பவர் மனநிலை உணரலாம்!

போற்றிடு வோரையும் புன்னகைப் போரையும்

ஏற்றிடு வார்நிலை எய்தினர் யாக்கூபே!

 

தந்தையைப் போலவே தம்பியூ சுபும்தம்

தந்திரப் பொறியினில் தடுக்கியே வீழ்ந்திடச்

சிந்தையின் சதியினைச் சீக்கிரம் தொடங்கிடத்

தந்தையை நெருங்கினர் சோதரர் ஓர்தினம்

 

என்றுமில் லாததாய் இன்றுதம் ஆடுகள்

நன்றாக மேய்ந்ததை நவின்றனன் ரூபிலே;

குன்றுமே லுலாவிய குள்ள நரியினைக்

கொன்றுதான் மாய்த்ததைக்கூறினன் ஷம்ஊனே!

 

"இங்குஅல் லாமலிந் நாள்வரை வேறிடம்

எங்கும்செல் லாமலே இங்கேயே யூசுபு

தங்கியே நிற்கிறான்; தந்தையே ஓர்முறை

எங்களோ டனுப்புவீர்" என்றனர் சோதரர்!

 

ஓடி யாடாமலே ஓய்ந்து கிடப்பதால்

வாடிப் போகிறான் வனப்புறும் யூசுபு

ஆடு மேய்ந்திடும் அடவிக் கனுப்பிடில்

பாடும் புள்ளினம் பார்த்து மகிழுவான்!

 

தேங்கனி கள்பல வும்செம் மாதுளைத்

தீங்கனி யும்மே தெவிட்டிட உண்டபின்

நாங்கள் யாவரும் நற்கனி யூசுபைத்

தீங்கு சூழாமல் திரும்பவும் சேர்க்கிறோம்.