பக்கம் எண் :

8


காதலிக்கவில்லை; அவரது அடிமைப்பெண்ணாக இருந்தாலே போதும்!" என்று (இயல் 38-பார்க்க) சுலைகா கூறுவதும், காதல் இலக்கியங்களிலேயே ஈடிணையற்ற சிறப்பானதாகும்.

   இறைவனின் திருமறையே இதை அழகான வரலாறென்று கூறுவதால், இந்தச் சிறுவனின் எழுதுகோலால் அந்த அழகுக்குச் சிறு மாசும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற அச்சத்தை நெஞ்சில் வைத்தெழுதினேன்.

   இப்படி எழுதப்பட்ட முதல் பாகத்தோடு மூன்று பதிப்புகள் வெளியாகி முடிந்து கொண்டிருந்த நேரத்தில், நான்காம் பதிப்பை அச்சிடுவதற்கான முயற்சியிலிறங்கினேன்.  

   சென்ற 1976ஆம் ஆண்டின் இறுதியில் ஒருநாள் ஈரோட்டில், ‘இளைஞன்’ ஏ.ஏ.ரஷீது அவர்களது இல்லத்தில் தங்கியபோது D . முகம்மது இஸ்மாயில் என்ற நண்பரைச் சந்திப்பதற்காக அவர் என்னை அழைத்துச் சென்றார்.

   நான் கொண்டு சென்றிருந்த மூன்றாம் பதிப்பு ‘யூசுப்-சுலைகா’வை அவரிடம் கொடுத்தோம். "பல்வேறு சிக்கலும் பிரச்சினைகளுமுடைய இந்த வரலாற்றினை முழுமையாக்க வேண்டு"மென்றார் அவர்.

   "அப்படியானால் இப்போது அது முழுமையாக இல்லையா?" என்று கேட்டார் ‘இளைஞன்’ ரஷீத்.

   "இது முழுமையானதா, முழுமையற்றதா என்று கவிஞருக்கே நன்றாகத் தெரியும்!" என்றார் அந்த நண்பர் முகம்மது இஸ்மாயில்.