"உங்களுக்குத் தோன்றும் குறையைத் தாராளமாகக் கூறுங்கள்" என்றேன். "யூசுப் கண்ட கனவையும், மிசுரின் மன்னர் கண்ட கனவையும் பூர்த்தியாக்குங்கள்." என்றார். ‘இன்ஷா அல்லாஹ்’ முயற்சிக்கிறேன் என்றேன். இதில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி.
என் அன்புக்குரிய கவிஞர் ஏ.வி.எம்.நஸீமுத்தீன் அவர்கள், யூசுப்-சுலைகா காப்பியத்திற்கு விரிவானதொரு ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தார். அவரும் "இக்காப்பியத்தை முழுமையாக்க வேண்டுமென்றும், சுலைகாவை யூசுபுடன் சேர்த்து வைத்த மாதிரி, அவரது பெற்றோரையும் பிறந்தோரையும் சேர்த்து வைக்கும் வரையும் இக்காப்பியத்தை தொடர்ந்திருக்க வேண்டும்" என்றும் வற்புறுத்தி இருந்தார்.
அடுத்து புலவர் அ. ஹிலால் முஸ்தபா அவர்கள் இக்காப்பியத்தின் கருவுக்குள் இலக்கியக் கண்ணோட்டமிட்டு, அதை கவிஞர் தா. காசீம் அவர்களின் "சரவிளக்கு" இதழில் எரிய விட்டார். அவரது நீண்ட கட்டுரையும் இந்த வரலாற்றின் பிற்பகுதியை நான் எழுதி முடிக்க வேண்டுமென்று தூண்டி விட்டது.
ஈரோட்டு நண்பர் D. முகம்மது இஸ்மாயில் அவர்களின் ஆரம்பத் தூண்டுதலுக்கு நான் கொடுத்த ‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் விருப்பமிருந்தால்) என்ற பதிலின் விளைவாகவே இவர்களையும் இறைவன் எழுத வைத்திருக்கிறான் என்று என் உள்ளுணர்வு குரல் கொடுத்தது.