பக்கம் எண் :

80


மாலையும் மெல்லத் தேய்ந்து

     மங்கிடக் கண்ட யாக்கூப்

சோலையைக் கடந்து மைந்தர்

     சென்றுள அடவிக் கேகும்

சாலையின் முனையில் நின்று

     தனிமையில் மனம்த விக்கும்

வேளையில் எதிரில் யாரோ

     வேகமாய் வருதல் கண்டார்.

 

வந்தவர் முன்னால் சென்று

     வழியினில் நீங்கள் யாரும்

எந்தனின் மைந்தர் தம்மை

     எங்கேனும் கண்ட துண்டோ?

சிந்தையே கலங்கி யாக்கூப்

     திகிலுடன் கேட்க அன்னோர்

"மைந்தரோ மற்றும் யாரோ

     வழியினில் காணோ" மென்றார்.

 

இருளிடை நின்ற யாக்கூப்

     இதயமும் இருளக் கண்கள்

மருண்டிட வானை நோக்கி

     மக்களின் நன்மைக் காக

இருகரம் விரித்து ஏக

     இறைவனை வேண்டி நெஞ்சம்

உருகினார்; மின்னல் வெட்டி

     உறுமிய திருண்ட வானம்!

 

நெளிந்திடும் மின்னல் ரேகை

     ஒளியினில் நெடுந்தூ ரத்தில்

தெளிவுடன் பலரைக் கண்டு

     சிந்தையில் அமைதி கொண்டு

களிப்புடன் "யூசுப்" என்று

     கதறினார் மீண்டும், மீண்டும்!

ஒளிமிகும் விண்மீன் ஒன்றே

     உதிர்ந்தது அதிர்ந்தார் யாக்கூப்.