பக்கம் எண் :

81


கிழக்கினில் நரிகள் ஓலம்

     கேட்டது தெற்கில் ஓநாய்

முழக்கிட, வடக்கி ருக்கும்

     மொட்டைமா மரத்திருந்து

பழக்கமாய் ஆந்தை ஒன்று

     பயங்கரக் குரல்எ ழுப்ப

வழக்கமாய் "யூசுப்" என்று

     வாய்விட்டே அலற லானார்.

 

அருகினில் நெருங்கி விட்ட

     அவர்களில் ‘ஷம்ஊன்’ என்போன்

இருளினில் தந்தை சப்தம்

     எழுவதைக் கேட்டுத் துன்பம்

பெருகிடும் குரல்கொ டுத்தான்

     பெரியவன் ‘ரூபில்’ பாய்ந்தே

அருகினில் வந்து யாக்கூப்

     அடிவீழ்ந் தரற்ற லானான்.

 

கண்ணுதிர்க் கின்ற நீரைக்

     கரங்களால் துடைத்த வாறே

ஒன்றும்பே சாது நிற்கும்

     ஒவ்வொரு மைந்த ராகச்

சென்றுபார்த் திட்ட யாக்கூப்

     திடுக்கத்தால் குரல்ந டுங்க

"என்னுயிர்ச் செல்வ மான

     யூசுபு எங்கே?" என்றார்.

 

துடித்திடும் தந்தை நோக்கித்

     துயருடன் ‘ரூபில்’ தொண்டை

அடைத்திட நடுங்கி "ஓநாய்

     அழகுறும் யூசுப் தன்னைத்

துடித்திடக் கடித்துக் கொன்று

     தூக்கியே சென்ற தென்றான்;

வெடித்தது பூமி, வானம்

     வீழ்ந்தது யாக்கூப் கண்ணில்.