"கடித்திடும் வரையும் நீங்கள் கைகட்டி நின்று யூசுப் துடித்திடக் கண்ணால் காணும் துணிச்சலெவ் வாறு பெற்றீர்..." முடித்திட வில்லை யாக்கூப் முந்தினான் ‘ரூபில்’ "நாங்கள் பிடித்திட முயன்றோம் ஓநாய் பிளந்தது யூசுப் நெஞ்சை!" "பார்த்திடச் சகித்தி டாமல் பதறியே விழிகள் பொத்தி வேர்த்திட நின்றோம் யூசுப் வீரிட்டு உயிர்து றக்க நேரினில் கண்டு யாங்கள் நிலைகுலைந் திருக்க ஓநாய் சீறியே பாய்ந்தி ழுத்துச் சென்றது’ என்று சொன்னான்! "எழில்மிகும் தம்பி யூசுப் இன்னுடல் கடித்த ஓநாய் கிழித்தெறிந் திட்ட சட்டை கிடந்தது எடுத்து வந்தோம்." மொழிந்த ‘ஷம்ஊன்!’ அதையே கொடுத்தனன், முகத்தை மூடி விழுந்தனர் யாக்கூப், தூக்கி விரைவினில் இல்லம் சேர்த்தார்! - - x - - |