சுலைகாவின் நம்பிக்கை இயல்-21 காலத்தின் இருவிழியின் இமைப்பாய்த் தோன்றும் கணக்கற்ற இரவுபகல் காத்து நிற்கும் ஞாலத்தின் பேரழகி சுலைகா அன்றும் நள்ளிரவு வரையினிலும் தனித்தி ருக்கச் சீலத்தின் பேரரசன் தைமூஸ் அங்கே திரைமறைவில் நின்றிருப்ப தறிந்தி டாமல் வேலொத்த விழிமூடி மனக்கண் முன்னே வீற்றிருக்கும் ஆணழகன் நோக்கிச் சொல்வாள். "நானாக அழைக்காமல் வலிய வந்து நள்ளிரவில் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு நானாக விரட்டாம லிருக்கும் போது நாடாள்வோன் மகளென்ற அச்சத் தாலே தானாக வந்ததுபோல் உடன் மறைந்து தனிமையினில் துடிதுடித்துத் தவிக்கச் செய்து வீணாக எதற்கென்னை வருத்த வேண்டும் விளம்பிடுவீர்" எனக்கண்ணீர் சுரக்கக் கேட்டாள். "கன்னங்கள் வழியுருண்டு உடையும் என்றன் கண்ணீரின் முத்துக்கள் கண்ட பின்னும் உன்னுள்ளம் இளகாம லிருப்ப தென்றால் ‘உலகத்து அரக்கரது தலைவ னாநீ? பெண்ணுள்ளம் படும்பாட்டை அறிந்தி டாமல் பேசாமல் நிற்கின்றாய் இனியும் நின்றால் என்னுள்ளம் தாங்காது வெடித்துப் போகும் இதுதானும் எண்ணமதோ?" என்று கேட்டாள். |