பக்கம் எண் :

84


அலைமோதும் இளம்நெஞ்சில் நிறைந்த நீயே

     அச்சமின்றி என்னருகில் வருவ தற்குத்

தலைவாசல் திறந்துவைத்துக் காவல் போக்கித்

     தாதியரை உமையழைத்து வழியும் காட்ட

நிலையோரம் பலநாட்கள் நிற்க வைத்தேன்.

     நீள்விழியும் நீர்சுரக்க எனைஏ மாற்றிக்

குலையாத நெஞ்சுறுதி குலைத்தே ஆசைக்

     கொடுந்தீயில் எனைத்தள்ளிக் கருகச் செய்தாய்.

 

கணப்பொழுதும் மறவாது கண்ணீர் சிந்திக்

     கருத்தழிந்து நான்வருந்த விரும்பிட் டாயோ?

மனப்பொருத்த மில்லையென்று மலைத்திட் டாயோ?

     வஞ்சகிகள் கண்வலையில் விழுந்திட் டாயோ?

எனதருகில் வரும்உமையே தடுப்பார் யாரும்

     இல்லையென்ப தறியாமல் இருந்திட் டாயோ?

மனம்விட்டு வாய்திறந்து எதற்கு என்று

     மறைக்காமல் சொல்லிடுவீர்" என்று கேட்டாள்.

 

விண்ணகத்தே ஒளிப்பிழம்பாய் அமர்ந்திட் டீரோ?

     விரிகடலின் அலைமடியில் துயின்றிட் டீரோ?

வண்ணமலர்ப் புன்னகையின் அழகு தன்னில்

     வரும்வழியில் மனம்மயங்கி நின்றிட் டீரோ?

மண்ணகத்தே மறைந்திருக்கும் வைரம் போன்று

     மாசற்ற இதயத்தில் ஒளிப ரப்பி

என்னகத்தை நின்னகமாய் ஆக்கி விட்டு

     எதற்காகப் பயந்தோட வேண்டு" மென்றாள்.

 

இத்தனைக்கும் யாதொன்றும் பதில்சொல் லாது

     எதிரினிலே காணுகின்ற அவனைப் பார்த்துக்

"கத்துகிறேன் அத்தனையும் செவியி லேற்றுக்

     கற்சிலையாய் நிற்கின்றாய்! வாய்தி றந்தால