பக்கம் எண் :

85


முத்துதிர்ந்து போகுமென அதரம் சேர்த்து

     மூடினையோ? இல்லைமுழுச் செவிடோ? அன்றி

எத்தினமும் வாய்பேசா ஊமை தாமோ?

     எப்படிநீ இருந்தாலும் ஏற்பேன்!" என்றாள்.

 

அருகினிலே காலடியின் அரவம் கேட்டு,

     அவனேதான் தனைநெருங்கித் துயர்து டைக்க

வருகின்றான் எனநினைத்த சுலைகா நெஞ்சில்

     வகைவகையாய்ப் பல்லுணர்வும் பொங்கிப் பாய

ஒருகணத்தில் விழிதிறந்தாள் தந்தை கண்டாள்.

     ஓவென்று கதறியவர் காலில் வீழ்ந்தாள்.

பெருகிவரும் கண்ணீரில் மிதக்கும் துன்பம்

     பேரழகி படுந்துயரைச் சொல்ல லாச்சு!

 

திருமகளார் சுலைகாவின் நிலையைக் கண்டு

     சிந்தையினில் பெருந்துயரம் கொண்ட தைமூஸ்

ஒருநொடியில் வாரிஎடுத் துச்சி மோந்தே

     ஒளியிழந்த அவள்விழியை உற்று நோக்கி

"அருமைமிகும் திருமகளே! உனக்கு நேர்ந்த

     அத்தனையும் யானறிவேன்! நீவி ரும்பும்

பெருமைபெறும் அவனெங்கே இருந்த போதும்

     பிடித்துவரச் செய்கின்றேன், அஞ்சேல்!" என்றார்.

 

"அவனுடைய இருப்பிடத்தைப் பெயரை யேனும்

     அறிந்திருந்தால்ஒருநொடியில் கொண்டுசேர்ப்பேன்

அவனுடைய அடையாளம் ஏதும் சொன்னால்

     அதைக்கொண்டே பிடித்துவரச் செய்யக் கூடும்.

கவலைவிடு கண்மணியே!" என்றார் தைமூஸ்

     கண்மூடி நாணத்தால் முகங்க விழ்த்துப்

பவளஇதழ் நகைஒளிர மௌனம் காத்தாள்.

     பாங்கியரை அழைத்துவிட்டு நகர்ந்தார் தைமூஸ்