| தாங்காத பெருஞ்சுமையைப் பிஞ்சு நெஞ்சில் தாங்கும்படிச் செய்திட்ட அவனை எண்ணித் தூங்காத சுலைகாவைச் சுற்றி நின்ற தோழியர்கள், "இளவரசி நினைவை விட்டும் நீங்காத பெரும்பேறு பெற்ற அந்த நிகரற்ற பாக்கியவான் அடையா ளத்தைப் பாங்கியர்க்கே சொல்லிடுவீர்!" என்று கேட்கப் பஞ்சணையில் அமர்ந்தபடிச் சுலைகா சொல்வாள்; "காந்தமெனக் கவருகின்ற கடைக்கண் வீச்சு, கடும்பகையும் அஞ்சுகின்ற தடந்தோள், உண்மைச் சாந்தமிகும் எழில்வதனம், கருணை பொங்கித் தவழுகின்ற கருவிழிகள், அகன்ற நெற்றி, பாந்தமிகும் விற்புருவம், நிமிர்ந்த நெஞ்சும் பார்த்திட்டேன்; இவையன்றி ஏதோ ஒன்றைக் காந்தனவன் பெற்றுள்ளான் அதையான் காணேன் கடவுளருட் பேரொளியென் றெண்ணு கின்றேன் இவையன்றி இன்னும்ஏதும் சொல்வ தென்றால் இவ்வுலக அழகெல்லாம் ஒன்று சேர்ந்தே அவனாக உருப்பெற்று வந்த தென்பேன்; அடையாளம் இவையன்றி வேறு காணேன் எவனேனும் இவ்வாறு காணப் பெற்றால் என்னிடத்தில் சேர்த்திடுவீர்; தந்தை யர்க்கும் கவனமுடன் அடையாளம் சொல்வீர்" என்றாள் கண்காட்டித் தோழியர்கள் நகைக்க லானார். "சிரிக்கின்ற தெதற்" கென்ற சுலைகா வுக்குத் தெளிவூட்டக் கிழத்தாதி விளக்கிச் சொல்வாள்; "அறிவுடைய இளவரசி! கனவி லேநாம் அமுதுண்ணக் கண்டதனால் பசியே போமோ? |