நெஞ்சினைக் கவர்ந்தெனை நீங்கிய தன்றியும் வஞ்சமாய் என்மன வலிமையும், பொறுமையும் வெஞ்சம ரின்றியே வீழ்த்திநீ சென்றனை தஞ்சமென் றடுத்திடில் தாக்குதல் நீதியோ? பாய்ந்திடும் வேங்கையின் பார்வையிற் பட்டமான் ஓய்ந்துடல் குன்றிடும் உண்மைபோ லென்முகம் ஆய்ந்தநும் பார்வையில் அனைத்தையும் இழந்தெனைச் சாய்ந்திடச் செய்தநீ தனிமையும் தருவதோ? ஆறுதல் காட்டிட ஆயிரம் தோழியர் கூறுதல் யாவையும் கூர்விழிச் சுடரினால் வீறுடன் சுட்டெனை விரும்பிடச் செய்தனை தேறுதல் நீயலால் தெய்வமும் அல்லவே! என்னிளம் நெஞ்சகம் இலங்கிடச் செய்தநின் கண்ணொளி இன்றெனைக் கலங்கிடச் செய்வதோ? மின்னொளி போல்முகம் மிளிர்ந்திடத் தோன்றியே பின்னொளிந் தோடுதல் பெருந்தகைக் கேற்றதோ? விண்ணவர் மன்னவர் வெற்றிகொள் வீரரும் பெண்ணெழிற் புன்னகை பெற்றிட நாடுவர் என்னிரு விழிகளின் இரத்தநீர்த் துளிகளை உன்னிரு விழிகளும் உவப்பது விந்தையே! கிட்டவே வந்தபின் கெஞ்சிடும் என்றனின் வட்டமா மதிமுகம் வாடிடச் செய்வதோ? இட்டமோ, இல்லையோ! என்னதான் நின்மனத் திட்டமோ அறிந்திலேன் செம்மலே சொல்லுவீர்! பெண்ணிடம் பேசுதல் பிழையென நினைத்தையோ? என்னிடம் பேசுதற் கெதுவுமே இல்லையோ? கண்ணிடம் பேசியே கருத்தினை விளக்கிட எண்ணிடும் நின்திறன் என்றனுக் கில்லையே! |