பக்கம் எண் :

90


கானகம் வதிந்திடும் கடுந்தவத் துறவியோ?

வானவர்க் கதிபனோ வையக வேந்தனோ?

தானவன் அருளொளி தங்கிடும் தூதனோ?

தேனெழும் வார்த்தையில் செப்புவாய் குரிசிலே!

 

என்மொழி அறிந்திடா திருக்கிறாய் என்றிடில்

நின்மொழி ஏதிலும் நினைப்பினை நிகழ்த்துவாய்

உன்மொழி உணர்ச்சியில் உணர்ந்திடக் கூடுமேல்

என்விழி பூத்திடும் எண்ணமும் புரிந்திடும்.

 

கத்திடும் பெண்ணெனைக் கண்டும்நின் வாயினைப்

பொத்திடும் மர்மமே புரிந்திலேன்! மௌனமே

பத்தியம் கொண்டெனைப் பார்க்கவந் திடுவதோ?

சத்தியம் செய்கிறேன் சற்றுநீர் பேசுவீர்!

 

எத்தனை சொல்வது இன்னுமென் செய்வது?

இத்தனை வேண்டியும் இரங்கிடாத் தங்களுக்

கத்தனை அழகையும் அளித்தவன்   அன்பினைச்

சுத்தமாய் மறுத்ததென் துயரினுக் காகவோ?

 

சிறந்திடும் பேரெழில் சிந்துமா ணிக்கமே

பிறந்ததெச் சுரங்கமோ புகுந்ததெம் முடியிலோ?

பிறந்தநின் குலத்தையும் பெற்றபொன் னாட்டையும்

மறந்தனை யோ?இலை மறைத்திட விருப்பமோ?

 

பசித்தவள் துடிக்கிறாள்; பார்த்துநீ ரசிக்கிறாய்!

புசித்திட வேண்டிடில் புன்னகை பூக்கிறாய்

விசித்திர இளைஞனாய் வெகுண்டிடும் வள்ளலே

பசித்திடும் என்முகம் பார்த்திட அச்சமோ?

 

வெடித்திடத் தக்கதாய் விம்மிடும் நெஞ்சினில்

துடித்திடும் துயரினைச் சுலைகாவின் நாவுகள்

வடித்திடக் கண்டவர் வாஞ்சையாய் நோக்கினார்

பிடித்தனள் அவர்கரம், பேசினார் அழகரே.