பக்கம் எண் :

91


"பெண்குலத் திலகமே! பேரெழிற் செல்வமே!

உன்முகத் தாமரை உவகையில் பூத்திட

விண்முகப் பரிதிநான், விரிகதிர்ச் சுடரும்நீ

என்றிறை அமைத்திடில் எனக்கது மகிழ்ச்சியே"

 

"பெருகிடும் உணர்ச்சியால் பேசிடும் மதியமே

உருகிடச் செய்தெனை; உன்வச மாக்கினை

உறுதியில் நிலைத்திடு, உணர்ச்சியை அடக்கிடு

இறுதியில் உனக்குநான் எனக்குநீ ஆகலாம்!"

 

‘எண்ணமே வாழ்வது இழிந்திடில் தாழ்வெனத்

திண்ணமாய் நம்பிடு திடமனம் பெற்றிடு

உண்மையாய்ச் சொல்லிடில் உன்மனம் போலவே

என்மன முன்னையே ஏற்றது!" என்றனர்.

 

காதலன் வார்த்தையைக் கவனமாய் கேட்டதும்

மாதவம் பலித்ததாய் மகிழ்ந்தவள் அவனிரு

பாதமே வீழ்ந்தவள் பற்றினாள்; படுக்கையின்

பாதமே கிடைத்தது; பதறியே விழித்தனள்!

 

அதுவரை நடந்தவை அனைத்துமே கனவென

வெதும்பிய சுலைகா விரைவினி லுணர்ந்தனள்

இதுவரை மறைவினில் இருந்த தோழியர்

அதிவிரை வாகவே அருகினில் கூடினர்!

 

சுலைகாவின் புலம்பல் :

"கண்ணிலே கருத்தி லேஎன்

கனவிலே வந்து மீண்டும்

விண்ணிலே பாய்ந்து செல்லும்

வித்தையே காட்டு கின்ற

அண்ணலே அழகி னாலென்

அகம்புகுந் தாட்சி செய்யும்

உன்னிலே என்னைச் சேர்க்க

ஒப்பிடா தென்னே?" என்றாள்.