பக்கம் எண் :

93


தன் அழகை இகழ்தல் :

உண்மையாய் அவனோ டென்னை

     ஒப்பியே நோக்கு தற்கே

ஒன்றுமே அடைந்தே னில்லை;

     உயிர்வதை அடைதற் கென்றே

என்னையே படைத்து விட்ட

     இறைவனோ அவனுக் கேற்ற

வன்னமாய்? அழகெ னக்கே

     வழங்கிட மறந்திட் டானே!

 

கண்களைக் கண்டித்தல் :

என்னையே எதும்கே ளாதே

     எதிர்வந்த அவனை நோக்கி

புண்பட வருத்தி, நெஞ்சில்

     புரையோ டச்செய்து விட்ட

கண்களே உங்கள் குற்றம்

     கொடிதிலும் கொடிதே! நீங்கள்

என்றுமே அவனை எண்ணி

     ஏங்கியே அழுவீர்!" என்றாள்

 

தன்னையே வதைத்தல் :

நெற்றியில் அறைந்து, மின்னி

     நெளிந்தி டும்கருங் குழலைப்

பற்றியே பிய்த்தெ றிந்தாள்

     பவளவாய் இதழ்க டித்தாள்

சுற்றிலும் நின்றி ருந்த

     தோழியர் மன்ன வர்க்கு

முற்றிலும் சொல்லச் சென்றார்,

     முதுகிழத் தாதி வந்தாள்!