‘கண்ணின் இமையாய் அண்ணன்மார் காப்பார்’ என்றாள் உனதன்னை ‘என்னிலும் மேலாய் உன்தந்தை இனிதே வளர்ப்பார்’ என்றாளே. உன்னிலும் மேலாய் உலகத்தே உயிரும் மதியா திருந்தேனே. என்னிலை அறிந்தே இறையோனும் ஏமாற் றினனோ அறியேனே. அதிகம் எதையும் விரும்புவதால் அதனால் நேரும் கொடுந்துன்பம் அதிகம் என்பதை அறியாமல் அனைத்தும் நீயாய் நினைத்தேனே. விதியோ விளைந்த சதியோதான் வெற்றி கொண்டெனை வீழ்த்தியதே. மதியும் விதியைப் பணிந்ததுவோ! மகனே?" என்றார் யாக்கூபே. வருந்தித் துடித்த தந்தையரின் வாட்டம் அகற்ற மைந்தரெல்லாம் வருந்திக் கண்ணீர் வடித்தார்கள். "வல்லோன் வகுத்த விதிப்படியே அருமைத் தம்பி யூசுபை அணுகிக் கொன்றது ஓநாயே பெருமைக் குரிய தந்தையரே பிழையாம் அறியோம்" என்றனரே. கொன்றது ஓநாய் என்றதுமே குமுறி எழுந்த யாக்கூபு "கொன்றது ஓநாய் உண்மையெனில் கண்டே வருவீர் அதை" யென்றார் |