பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்1


பாயிரம்

இறை வாழ்த்து

“அம்” முதலாய் அருள்முதலாய் அகஒளியின் ஒருமுதலாய்
நும்முதலாய் அவர்முதலாய் நம்முதலாய் மும்முதலாய்
வெம்முதலாய்ப் பணிஇயற்றி விம்முதலாய் ஆனோர்க்கும்
செம்முதலாய்த் திகழ்வதனைச் சிந்தையினால் தொழுதெழுவோம். 1

அவன் அருளால் அவன் புகழ் பாடுவோம்

திசைவெளி உருவாய்த் தெளிவுறும் அருளாய்த்

தேர்ந்தவர் நெஞ்சுள்மெய்ப் பொருளாய்

அசைவுறும் அசையா எப்பொருள் தனிலும்

அகத்திலும் புறத்திலும் பொலிவாய்த்

தசையினில் உயிரில் தனிநலம் புரிவான்

தரையிலும் விண்ணிலும் விரிவான்

இசைதரும் ஒருவன் இறையவன் அவனே

இணையிலா அருள்புரி பவனே! 2

தமிழே துணை நிற்பாய்!

கல்லினைக் கனலை நீரைக் காற்றினை விண்ணை முன்னர்ச்
சொல்லின தமிழே! அன்பின் சுடரினை அறத்தின் மாண்பைப்
பல்லினம் பெற்றிங்(கு) உய்யப் பண்ணிய நபிகள் கோனின்
நல்லிசைப் பெருமை பாட நயத்தொடு முன் நிற்பாயே!