காவியம் பாடத் துணிந்தேன்
ஆசிய மண்ணில் வீசிய ஒளியார் அரும்பணி முகம்மது நபியார்
பேசிய எல்லாம் மாசிலா இறைவன் பெருமையே அன்றிவே றில்லை
பூசிய தில்லா மான்மத மணமே பொருந்துவான் தூதரின் மீது
கூசிய நெஞ்சால் காவியம் தானே கூறிடவே துணிந்தேனே! 10
இந்நூல் உரைக்கும் பொருள்
வரும்புகழ் எல்லாம் வானவன் ஒருவன் வலியனுக் கேஉரித் தாகும்
விரும்புகல் உருவம் வெண்கலம் மட்டும் விழைந்திறை புகும்
பொருள்இல்லை
அரும்புகள் உள்ளும் துரும்புகள் உள்ளும் அவன்அருள் விளைந்திடும் என்று
பெரும்புவிக் குரைத்த புனிதமாதவனின் பீடினை உரைக்கும் இந்நூலே! 11
அவையடக்கம்
கல்லில் கூட ஈரமுண்டாகும்
வல்லினம் மெல்லி னத்தின் வகையினை அறிந்தி டாத
புல்லினும் புன்மை கொண்ட புலவன்யான் கவிதைஏதோ
சொல்லினும் உள்ளத் தின்கண் சுடரிலேன் என்ற போதும்
கல்லினும் ஈரமுண்டாம் கருத்தினால் இதைநான் செய்தேன் 12
உமறுப்புலவர் காட்டிய வழியில்
இருள்துணிந்(து) ஒளியைப் பார்க்க எண்ணிய தன்மை போல
மருள்திணிந்(து) உள்ள நெஞ்ச மனிதன் யான் உமறு கண்ட
பொருள் துணிந்(து) ஒளிமுன்நின்று புகழ்ந்திடப் பட்டோன் மாண்பின்
அருள் பணிந்(து) இதனைச் செய்தேன் அவன்புகழ் துணையாய்க் கொண்டே; 13
செந்தமிழ்க் கவியால் சொல்வேன்
நீருளும் நெருப்பி னுள்ளும் நெடுவெளி விண்ணுக் குள்ளும்
பாருள மண்ணுக் குள்ளும் படர்வளிக் குள்ளும் உள்ளோன்
காருள அருளின் மேலோன் கடவுள்நன் னெறியைக் காட்டும்
சீருள ஒளியோன் மாண்பைச் செந்தமிழ்க் கவியால் சொல்வேன். 14
காவியம் பிறந்த களம்
சமய நட்பால் பனுவல் செய்தேன்
உருவில்லா ஒளியைக் கண்ணில் உணர்விலான் புகழ்தல்போலக்
கருவில்லான் தூதர் கோனைக் கவிதன்னால் பாடும் நூலைத்
தெருவெல்லாம் சமய நட்பே செழித்தோங்கும் புதுவை நல்லூர்த்
துரை மாலி றையன் அன்பு தோன்றவே துணிந்து செய்தேன். 15
|