பக்கம் எண் :

4துரை-மாலிறையன்

1. புவி புகல் காண்டம்

1. பெருமானார் பிறப்புப் படலம்

புவிமண் எடுத்து வருக

மண்ணைப் படைத்த இறைவனவன் மண்ணை மலர்த்த விரும்பியதால்
விண்ணை வணங்கும் மக்களினம் விளைய வேண்டும் என எண்ணி
“விண்ணோர் தலைவர் மிக்காயீல்! விரைந்து நீவிர் புவி சென்று
மண்ணை எடுத்து வந்திடுக மனிதன் உருவைப் படைக்க” என்றான். 1

என் மண்ணை எடுக்காதே

ஆணை கேட்ட மிக்காயீல் அழகாய் இருந்த புவிமலரில்
தேனை எடுக்கும் வண்டைப்போல் திருக்கை கொண்டு மண்ணெடுக்கக்
காணும் வாய்ப்புப் பெற்றபுவி “கடவுள் மீதில் உரைக்கின்றேன்
ஆணை! என்மண் எடுக்காதே அப்பாலே போ” என்றதுவே; 2

அடுத்து இசுறாஃபீல் சென்றார்

தடுத்த புவியின் சொல்கேட்டுத் தளர்ந்து மீண்ட மிக்காயீல்
விடுத்த இறைவன் தன்னிடத்தில் விளைந்த வற்றைக்கூற, இறை
அடுத்த வானோர் இசுறாஃபீல் அவரை அனுப்பப் புவிமீண்டும்
“எடுக்காதீர் மண்!” எனக்கூற இவரும் அதைப்போய்த் தெரிவித்தார். 3

இசுறாயீல் மண் எடுக்கச் சென்றார்

இதையும் கேட்ட இறைபின்னர் இசுறா யீலை வரச் செய்து
“சதையும் எலும்பும் ஆன உடல் தன்னைப்படைக்க மண்வேண்டும்
பதமாய் எடுத்து வருக!” என்று பகரக்கேட்ட அவ்வானோர்
இதயம் மகிழ்ந்து புவிமீதில் இருந்து மண்ணை எடுக்கையிலே; 4

நீ என்னைத் தடுக்காதே

முன்னோர் இரண்டு பேருக்கும் மொழிந்த வாறே மண்கூற
“இன்னார் என்றே அறியாமல் என்னைத் தடுக்க முயலாதே
உன்னை என்னைப் படைத்தவன் தான் உடனே மண்ணைக் கேட்டுள்ளான்
என்னை நீதான் தடுத்தாலும் எடுத்தே செல்வேன்” எனச்சொன்னார். 5