பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்5


இறைவன் சின்களைப் படைத்தான்

உறுதி கண்ட புவி தானும் உருக்க மாக வானோர் முன்
“இறுதி இல்லா வானோரே! இயம்புகின்றேன் கேளுங்கள்
அறுதி யிட்டே என்னைத்தான் அழகாய் இறைவன் படைத்துள்ளான்
மறதி யில்லான் ஆண்டவனே மண்ணில் சின்கள் படைத்திட்டான்.” 6

சின்களின் கொடுமையை இறைவன் முன் கூறினேன்

சின்கள் அந்நாள் செய்பாவச் சிறுமைச் செயல்கள் ஏராளம்
புன்கண் பட்டுப் பலநாள்கள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்ததன்பின்
என்தன் னாலும் இயலாமல் இறைவன் இடத்தில் முறையிட்டேன்
அன்பால் அவனே முன்வந்தான் அழித்தான் தீயசின்களையே! 7

மக்கள் கூட நன்றி மறப்பார்கள்

பொல்லா மனிதர் கூட்டத்தைப் புதிதாய்ப் படைக்க நினைக்கின்றான்
வல்லான் இறைவன் இருந்தாலும் மக்கள் நன்றி மறப்பார்கள்
கல்லா மக்கள் செயல்கண்டு கலங்கி இறைமுன் முறையிடுவேன்
எல்லாம் நடக்கும் என்பதனால் ஈங்கே இதனைத் தடுக்கின்றேன்” 8

இசுறாயீல் மண் எடுத்துப் போனார்

என்றே உலகம் உரை செய்தும் இரக்கம் இன்றி இசுறாயீல்
“நன்றே செய்வான் இறைவன்” என நவின்று மண்ணை எடுத்திடவும்
“ஒன்றேன், ஒன்றேன்” எனக்கூறி உரிய புவிதான் கதறிடவும்
அன்றே மண்ணை அவ்வானோர் அருவான் எடுத்துப் போனாரே! 9

நபியாரைப் படைக்க இறைவன் நினைத்தான்

“ஆதம் நபியை உருவாக்க அம்மண் உதவும்” எனக்கூறி
மாத வத்து நபித் தூதர் மணிப்பொன் உடலின் உருவமைக்க
ஆதி முதல்வன் எண்ணியதால் அருகில் நின்ற செபுறயீலை
நீதி மாறா மதினாமண் நெருங்கி எடுக்க அனுப்பி வைத்தான். 10