முகம்மதுவைப் படைக்க நெறி வகுத்தான்
வானோர் இருவர் தருமண்ணை வகையாய்க் கலந்தே ஒன்றாக்கி
ஆன சிறப்பால் ஆதம் எனும் ஆணின் உருவம் உண்டாக்கி
ஊனார் முதுகுத் தண்டுவடம் ஒளிதான் பெறவே உருவாக்கித்
தேனார் மொழியார் முகம்மதுவின் திருத் தோற்றத்தின் நெறி வகுத்தான்; 11
முதல் பெண் அவ்வாவைப் படைத்தான்
படைத்த முதலாம் நபி ஆதம் பண்பிற் கேற்ற துணையாக
இடைச் சிறுத்த பெண் அவ்வா எழிலாரையும் உறவாக்கித்
தடையில்லாமல் தகு நபியார் தரைமேல் தோன்ற நெறி ஆக்கிக்
கொடையில் சிறந்த நல்லிறைவன் குறை ஒன்றின்றி அருள்செய்தான். 12
ஐந்து விரல்களில் ஐவர் ஒளியாய்த் தங்கினர்
முகம்மது ஒளியார் முத்தொளியும் முழுதும் துணைசெய் அபூபக்கர்
அகமே சிறந்த உமறு உதுமான் அலீயார் என்னும் நல்லோரும்
தகும் நல் ஒளியாய் வலக்கையின் விரல்கள் ஐந்தில் தங்கிவிடப்
புகன்றான் இறைவன் அவ்வாறே பொலிந்தார் காதல் மன்னவரே! 13
ஆதம் அவ்வா இறையாணையை மீறினார்
விண்ணோர் எல்லாம் தொழுமாறு விளங்கி வந்த ஆதம்அவ்வா
பண்ணார் இறைவன் பகர்ஆணைப் படியே நில்லா மனத்தினராய்
உண்ணாக் கனியை உண்டார்கள் ஒளிசெய் இறைவன் சினம்பட்டுத்
தண்ணார் உலகம் தனில்வந்து தவித்துத் திரிந்து களைத்தார்கள். 14
இறைவனிடம் மன்னிப்பு வேண்டினர்
“ஒளிமெய் நல்லார் முகம்மதுவின் ஒளியே உடையோம் ஆதலினால்
வெளியில் திரிந்து வருந்தும்எமை விழைந்து காக்க வேண்டு”மென
அளியார் ஆதம் அவ்வாவும் அரிய இறைமுன் வேண்டிடவே
எளியார்க் கிரங்கும் இறையவனும் இருவர் தமக்கும் அருள்செய்தான்; 15
|