இருவர் மகிழ்ந்து உறவாடி வாழ்ந்தனர்
உலகில் இருவர் ஒன்றாகி உலவும் அன்றில் போலானார்;
நிலவும் ஒளியும் போல் அன்னார் நெருங்கி வாழ்ந்து பொலிந்தார்கள்;
குலவும் மான்போல் குயில்போலக் கூடி ஆடிக் களித்தார்கள்;
நலமும் வளமும் பெற்று அன்பு நற்றேன் உண்டு மகிழ்ந்தார்கள். 16
நாற்பது மக்களை ஈன்றனர்
காதல் வாழ்வின் பயனாகக் கனிந்த ஆண்பெண் நாற்பதுபேர்
தீதில் லாமல் பிறந்தார்கள்; தேயம் காக்கத் தோன்றுமொளி
நாதன் தோன்றும் நெறிகாட்ட நல்லோர் புகழை நிலை நாட்டச்
சீது நல்லார் என்னும் நபி செம்மை யாராய்ப் பிறந்தாரே! 17
முகம்மது நபியின் தலைமுறை தோன்றியது
கடவுள் அருளின் நெறியாலே கனிந்த நூரே முகம்மதுவின்
படர்பே ரொளிகள் சீதுநபி பற்றி அவர்தம் நெற்றியிலே
தொடர்வான் நெறியின் படிஒளிரத் தூய நபிகள் தலைமுறைகள்
கடன்செய் முறையால் வையத்தில் காலந்தோறும் எழுந்தனவே! 18
சீது முதல் ஐபர் வரை பதினால்வர்
சீது மகனார் யானீசும் சீர்கொள் கயினான் மகுலீலும்
ஓதும் எரித்தும் அகுநூகும் உழைப்பின் முதல்வர் இதுரீசும்
ஈதல் மனத்து மத்துசல்கும் இசைகொள் லாம்கு நூகும்சாமும்
தீதில் அறுப குசதுவும் திகழ் சாலிகுவும் ஐபருவும்; 19
பாலிகு முதல் மிக்குவம் வரை பதின்மூவர்
ஆனமைந்தர் பாலிகுவும் அரிய றாகுவா மைந்தர்
தேன்சாறுகு நாகூறுஆசீர் தீத் தீண்டா இபுராகீமும்
வானோர் போற்றும் இசுமாயீல் வளர்நா பித்தும் எசுகபுவும்
ஈன்யஃ றுபுவும் தயிறகுவும் எழில்நா கூறும் மிக்குவமும்; 20
|