உதத்து முதல் முர்றத்து வரை பதினறுவர்
ஒளிசேர் உதத்தும் அதுனானும் உயர்மு அத்து நிசார்முளறும்
அளவில் புகழார் இசுயாசும் அவர்சேர் முதுறக் கத்தும்நல்
உளமார் குசைமா கனானாகும் நுளறு மாலிக்கு உயர்பிகுறும்
வளமார் காலிபு உலுவையுவும் வலிசேர் ககுவும் முருறத்தும்; 21
கிலாபு முதல் அப்துல்லா வரை அறுவர்
கிலாபும் குசைய்யும் அப்துல் முனாபு ஆசீம் அப்துல் முத்தலிப்பும்
நிலாவின் ஒளியே நிலைபெற்ற நெடுஞ்சீர்ப் பொலிவும் விண்ணருளும்
உலாவும் உள்ளம் உடையவராய் உலகு புரக்கத் தோன்றி அன்பு
குலாவும் அப்துல்லாஎன்னும் கொண்டலாரும் தோன்றினரே! 22
முகம்மதுவின் தோற்றம் புகல்வோம்
மண்ணில் ஒளியே நிலைபெறவும் மாந்தர் வாழ்வு நலம்பெறவும்
விண்ணி லிருந்த நபிபெருமான் வியன்பேருலகில் உருவெடுத்துக்
கண்ணில் அருளே பெருகிவரக் கனிந்த இறைவன் தூதரெனும்
அண்ணல் கோமான் முகம்மதுவின் அரிய தோற்றம் புகன்றிடுவோம். 23
மக்காவின் இயற்கை வளம்
மலைகளுக்குத் தாயாகும் மாண்பு கொண்ட தாயீபு
மலையின் தொடரால் மழைநீரும் மாறாச் சோலைப் பசுமைகளும்
வலைகள் போட்டுப் பிடியாமல் வாய்க்கும் மானின் குடும்பங்களும்
குலைகள் கொத்துக் கொத்தாகக் கொடுக்கும் ஈச்ச மரவகையும்; 24
வானவர் விரும்பும் மக்கா
வரம்பு மீறா ஆறுகளால் வளமுண்டாகும் வயல்வெளியும்
நிரம்பி யுள்ள மரவகைகள் நெருங்கி யுள்ள காடுகளும்
வரங் குவிக்கும் வானவரின் வருகை கொண்ட சிறப்புகளும்
ஒருங்கு சேர்ந்து செழித்துள்ள உயர்ந்த மக்கா நல்லூரே! 25
மூடநம்பிக்கை நிறைந்திருந்தது
ஆண்டான் அடிமை எனும் கொடுமை ஆங்கே மனித உரிமைஎனப்
பூண்ட வர்தாம் பொலிந்தார்கள் பொல்லா மூட நம்பிக்கை
தோண்டி வைத்த பள்ளங்கள் தோன்றா வண்ணம் பழமைஎனும்
நீண்ட திரையால் மறைந்தனவே நேர்மை இல்லார் நெஞ்சாலே! 26
|