|
இசுலாம் நெறி இவ்வகையிலும்
பரவியது
சொன்னவர் பெருமை கேட்டுச் சூழ்ந்தவர் உள்ளம் மாறி
மன்னவர் நபிநல் லாரின் மணியுரை வழியில் நின்று
முன்னவர் போல் எல்லாரும் முசுலீமாய் மாறி னார்கள்
இன்னவாறு இசுலாம் அந்த இடத்திலும் பரவிற் றாமே! 54
அண்ணலார் முன்னறிவிப்புச்
செய்தார்
முன்னறி விப்புச் செய்யும் முதலவன் தூதர் ஓர்கால்
“நன்னிலை தன்னில் வாழ்ந்த நாட்டவர் பாரசீகர்
திண்ணமாய் ஒரு காலத்தில் திண்மையை இழந்து தோற்பார்
முன்னின்ற உரோமர் தாமே மூண்ட போர் வெல்வார்”
என்றார். 55
இது நடக்கவே நடக்காது
“இப்படி இயம்பு கின்றார் எங்ஙனம் இது நடக்கும்?
எப்படிப் பார்த்த போதும் இவர்களைத் தோற்கடிக்க
முப்படி வலிமை ரோமர் முறைப்படி பெற்றால் கூட
அப்படி வெற்றி ஒன்றை அவர்பெற இயலா” தென்றார்; 56
அண்ணலார் சொல்லியது
நடந்தது
மொழிந்தமுன் னறிவிப் பஃது முழுவதும் வாய்மை யாகிக்
கழிந்தன ஏழாம் ஆண்டில் கறுத்தெழுந் திட்ட போரில்
ஒழிந்தனர் பார சீகர் உரோமரால் என்னும் வண்ணம்
பழிபடத் தோற்று நின்றார் பாரசீகரும்அந் நாளே! 57
இவ்வகையிலும் இசுலாம்
தழைத்தது
உரைத்தகோன் வாய்மை இன்றே உணர்ந்தனம் என்று கூறி
நிரைத்தபா ரசீகர் கூட்டம் நெடியமா நபியார் முன்னர்
உரைத்தனர் கலிமா; அல்லாஹ் உயர்வினைப் புரிந்து கொண்டே
தரைத்தனில் இந்த வாறும் தழைத்தது இசுலாம் தானே! 58
தோழர்களே! நாடெங்கிலும்
செல்க
“சுடரவன் இறைவன் மாண்பைச் சொல்லியே வருக” என்று
தொடர்ந்தநல் தோழர் தம்மைத் தொலைவுள நாட்டுக் கெல்லாம்
படர்ந்துசென் றிடவே வைத்துப் பண்புடன் நடக்கத் தூண்டி
உடன்படும் தோழர் தங்கள் உளம்கொள இவற்றைச் சொன்னார்; 59
|