பக்கம் எண் :

472துரை-மாலிறையன்

அத்தார் தற்பெருமையோடு பேசினார்

அழைப்பினைக் கேட்ட நல்லோர் அமைதியாய் வெளியில் வந்தார்
தழைத்த உம்தகுதி யாவும் தந்திட வல்லார் “அத்தார்”
இழைத்திடும் இனிய சொல்லார் இயம்பட்டும் என்ற போதில்
அழைத்தவர் தங்கள் சார்பில் அத்தாரும் சொல முற்பட்டார்; 66

எம்மை வெல்ல எவருமில்லை

“இறைவனை வணங்கும் யாங்கள் என்றென்றும் அரச ராக
நிறைந்த செல்வந்த ராக நீள்புகழ் கொண்டு வாழ்ந்தோம்
குறைவிலா அரிய செல்வம் கொண்டவர் யாங்கள்; இந்த
முறையினில் வாழும் எங்கள் முன்னிற்க எவருள் ளார்கள்? 67

வெல்பவர் முன்னே வரலாம்

கண்ணிய மாக வாழும் எங்களைக் காட்டிலும் யார்
புண்ணியம் செய்தார் இந்தப் புவியிலே இருக்கின்றார்கள்?
எண்ணியே யாங்கள் சொன்ன இயல்பிலே இருப்பாரானால்
திண்ணிய நிலைமை தன்னைத் தெரிவிக்க வரலாம்” என்றார். 68

அண்ணலார் சார்பில் தாபித்து பேசினார்

சிறப்பினைச் சொன்ன “அத்தார்” செருக்கினை அடக்குதற்கு
முறைப்படி அருகி ருந்த முன்னவர் தாபித்தின்பால்
மறைப்படி ஒழுகு கின்ற மகம்மது கண்ணால் நோக்கக்
கறைபடி யாத நல்லோர் கருத்தினை எடுத்து வைத்தார். 69

எல்லாம் இறைவன் பணி

அகல்வானை வையம் தன்னை ஆக்கிய இறைவ னுக்கே
புகழெல்லாம் உரிமை என்று புகன்றவர் மேலும் சொன்னார்
வகையான அரசு தந்தான் வானவன் வானி லுள்ள
தொகையடி யார்கட் குள்ளே தூயரைத் தூதாய் விட்டான். 70

நாங்கள் நாயகத்தைப் பின்பற்றினோம்

வாய்மையும் ஒழுக்கம் தானும் வாய்த்தவர் உலக மண்ணில்
நேயத்தை வளர்ப்பார் மூலம் நிறைபுகழ் மறையைத் தந்தான்
ஆயவர் மக்கட் கெல்லாம் அரியதீன் நெறியைக் காட்டித்
தாயெனத் தாங்கு கின்றார் தட்டாமல் அவர்பின் நின்றோம்.” 71