பக்கம் எண் :

512துரை-மாலிறையன்

மறத்திற்கும் அன்பே துணை

அறந்தனையே நிலைநிறுத்த அன்புதனை

அகம்கொள்வார் நிலைத்தபாரில்

மறந்தனுக்கும் அன்பினையே துணையாக

வைத்துநலம் மலரச் செய்த

சிறந்தநபி பெருமானை மணிமக்காச்

செம்மலினை உலகிற் குய்த்துப்

புறந்தந்த பேரொளியைப் புகழ்புரிந்த

பொன்னொளியைப் போற்றுவோமே! 61

நல்வினை நன்மை செய்யும்

இவ்வுலகில் மாந்தர்கள் செயல்வினையின்

நிலைமைதனக் கொப்ப தாக

அவ்வுலகில் நலம்தீமை பெறுவரெனும்

அரிதான செய்தி கூறச்

செவ்வுலகம் செல்க என நபியாரை

அனுப்பி வைத்த சீரியோனை

எவ்வுலகும் போற்றுகிற பெரியோனை

ஏத்திடுவோம் என்றும் யாமே! 62

ஒப்பில்லா ஓவியன் ஒருவனே!

ஆவியினை ஆங்காங்கே அரிதாக

அடைத்துவைக்கும் பொருள்வரைந்த

ஓவியனை; ஒப்பில்லா ஒளியவனை

இனியவனை; நபிப்பெம்மானை

நோய்வினைகள் இல்லாமல் உலகினையே

புரந்தளிக்க அனுப்பி யோனை

நாவினையால் நெஞ்சதனால் நலம்கூறி

நாம்வணங்கி வாழ்த்துவோமே! 63