பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
2

2

2. ஈசுவரமுனிகள் அருளிச்செய்தது

        
         திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்
        மருவினிய வண்பொருநல் என்றும் - அருமறைகள்
        அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
        சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து.

    பொ - ரை : ‘மனமே, திருவழுதி நாடு என்றும்’ அழகிய திருக்குருகூர் என்றும், நீராடுவதற்கு இனியதாயுள்ள அழகிய தாமிரபரணி என்றும், அரிய வேதங்களை அந்தாதித்தொடையால் திருவாய்மொழியாக அருளிச்செய்த ஆழ்வாருடைய இரண்டு திருவடிகளையே எப்பொழுதும் தெளிவுடனே நினைக்கக் கடவாய்,’ என்கிறார்.

    ‘வழுதி நாடன் சடகோபன்’ (9. 2: 11.) என்றும், ‘தென்குருகூர்ச் சடகோபன்’ (1. 7: 11.) என்றும், மொய்புனல் பொருநல் துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்’   (7. 2: 11.) என்றும் ஆங்காங்கு வருதலால், ‘திருவழுதி நாடென்றும், தென்குருகூர் என்றும், மருவினிய வண்பொருநல் என்றும், அந்தாதி செய்தான்,’ என்கிறார். இனி, ‘என்றும் என்றும் என்றும் நினைந்து, அடி இணையை எப்பொழுதும் சிந்தியாய்,’ என்று கூட்டி முடிப்பினும் அமையும். இங்ஙனம் கொள்ளுங்கால், உத்தேசியமான பொருளின் சம்பந்த சம்பந்தம் பெற்ற பொருள்களும் உத்தேசியம் என்ற சாத்திரப் பொருள் வெளியாம். இங்கு உத்தேசியப் பொருள் - ஆழ்வார்; சம்பந்தம் பெற்ற பொருள் - தென்குருகூர், வண்பொருநல்; சம்பந்த சம்பந்தம் பெற்ற பொருள் - திருவழுதி நாடு. 

( 2 )

3. சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது

        மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
        இனத்தாரை அல்லாது இறைஞ்சேன் - தனத்தாலும்
        ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன்
        பாதங்கள் யாமுடைய பற்று.

    பொ - ரை : ‘வளம் பொருந்திய திருக்குருகூரை மனத்தாலும் வாக்காலும் விரும்புகிற கூட்டத்தாரை அல்லாமல் மற்றையோரை வணங்கமாட்டேன்; செல்வத்தாலும் சிறிதும் குறைவுடையேன் அல்லேன்; என் தந்தையாராகிய ஸ்ரீ சடகோபருடைய திருவடிகள் எமக்குப் பொருந்திய செல்வமாகும்,’ என்கிறார்.