பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
390

பெரியார்களைப் பற்றிய குறிப்பு

    அழகியமணவாளச்சீயர் : இவர் பெரியவாச்சான் பிள்ளையினுடைய மாணாக்கர்; திருவாய்மொழிக்குப் ‘பன்னீராயிரப்படி’ என்னும் வியாக்கியானத்தை அருளிச்செய்தவர்; துறவறத்தை மேற்கொண்டவர்; பரசமயகோளரியாய் விளங்கினாராதலின், ‘வாதி கேசரி’ என்ற சிறப்புப்பெயரைச்சேர்த்து, ‘வாதி கேசரி அழகிய மணவாளச்சீயர்’ என்று இவர் வழங்கப்படுவர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர். வரதராஜர், சுந்தரஜாமாத்ருமுனி என்பன இவருடைய வேறு திருப்பெயர்கள்.

    அனந்தாழ்வான் : இவர் இராமாநுசருடைய மாணாக்கர்; எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர்; தம் ஆசாரியர் கட்டளைப்படி திருமலைக்குச் சென்று, அங்கு ஓர் ஏரியை வெட்டி, அதற்கு ‘இராமாநுசன் புத்தேரி’ என்ற பெயரை அமைத்து, ஒரு நந்தவனத்தை உண்டாக்கி, அதிலிருந்து மலர்களைப் பறித்துத் திருவேங்கடமுடையானுக்கு நாடோறும் புஷ்பகைங்கரியம் செய்து வந்தவர். ஒரு நாள், மலர் பறிக்கையில் நல்லபாம்பு ஒன்று இவர் கையிலே தீண்ட, அதற்குப் பரிகாரம் ஒன்றும் செய்யாது மீண்டு, நீராடி, பின்னரும் சென்று மலர்களைப் பறித்து மாலை தொடுத்துத் திருவேங்கடமுடையானைச் சேவிக்கச் சென்றார்; அவ்வளவில், இறைவனும் திருவாய் மலர்ந்து, ‘விஷந்தீர்க்க வேண்டா என்றிருந்தது என்னை?’ என்று கேட்டருள, இவரும் ‘கடியுண்ட பாம்பு வலிதாகில் திருக்கோனேரியில் தீர்த்தமாடித் திருவேங்கடமுடையானைச் சேவிக்கிறேன்; கடித்த பாம்பு வலிதாகில் விரஜையிலே தீர்த்தமாடி ஸ்ரீவைகுண்டநாதனைச் சேவிக்கிறேன் என்றிருந்தேன்,’ என்று பதில் இறுத்த பரமயோகி; திருவாய்மொழிக்கு ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி’ என்ற தனியனை அருளிச்செய்தவர். கூரத்தாழ்வானுக்குப் பின் பிறந்தவர் என்று இவரைக் கூறுவர்.

   
ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் : இவர் ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர், இராமாநுசருக்கு ஆசார்யர். இராமாநுசருக்குப் பெரியதிருமொழி மூலமும், திருவாய்மொழி மூலமும் கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்கியானமும், துவயார்த்தமும் அருளிச்செய்தவர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர்; திருவரங்கத்து இறைவன் முன்னர்த் திவ்வியப்பிரபந்தத்தை இசையோடு பாடி,