|
தம
தம் ஆசாரியருடைய நியமனத்தின்படியே
சென்று, இவர் பிறந்த பன்னிரண்டாம் நாள் இவருக்குச் செய்ய வேண்டுவனவற்றைச் செய்து,
‘யமுனைத்துறைவர்’ என்ற பெயரையும் வைத்து மீண்டனர். ஸ்ரீமந்நாதமுனிகட்குப் பௌத்திரர். இவர்,
இளமைப்பருவத்தில் மஹாபாஷ்யபட்டர் என்பவரிடத்தில் சாஸ்திராப்பியாசம் செய்தார். அக்காலத்தில்,
இராச புரோகிதனும் மகா வித்துவானுமான ஆக்கியாழ்வானோடு வாதஞ்செய்யத் தொடங்கிய போது இராசபத்தினியானவள்,
‘இவர் தோற்கமாட்டார்’ என்று உறுதி கூற, அரசன் ‘நம் ஆக்கியாழ்வான் தோற்றால் இவருக்குப்
பாதி ராச்சியந்தருவேன்.’ என்று சூளுறவு செய்ய, உடனே அங்கு நடந்த பல வகை வாதங்களிலும் யமுனைத்துறைவரே
வெற்றியடைய, அது கண்டு, தனது சூளுறவு நிறைவேறினமைபற்றி மகிழ்ச்சி கொண்ட அரசபத்தினி,
‘என்னை ஆள வந்தாரோ!’ என்று கொண்டாடியதனால், அதுமுதல் இவர் ‘ஆளவந்தார்’ என்ற திருப்பெயரால்
வழங்கப்பட்டார். மணக்கால் நம்பிகளுடைய உபதேசத்தால் சரணாகதி தருமம் நெஞ்சிலே பட்டு ஆநுகூல்யம்
மிகுந்து, அரசவாழ்வில் வெறுப்புற்று, அதனைத் துறந்து, துறவறத்தை மேற்கொண்டு, திருவரங்கத்திலேயே
நித்தியவாசஞ்செய்தவர். இப்பெரியார்க்கு மாணாக்கர் பலர். அவர்களுள், திருமலையாண்டான், திருக்கோட்டி
நம்பி, திருவரங்கப் பெருமாளரையர், திருமலை நம்பி, பெரிய நம்பி என்பவர்கள் தலைவர்கள்.
இவருடைய மாணாக்கர்களுள் ‘மாறனேரி நம்பி’ என்னுந் திருக்குலத்து அடியாரும் ஒருவராவர். ‘ஆம்முதல்வன்’
என்று இராமாநுசரை அபிமானித்தவர். அரசன் காரணத்தால் இராமாநுசர் மேற்கே எழுந்தருளின காலத்தில்
அங்கு அவர் உபந்யசித்த கட்டளை கேட்டு’ ஆசார்யர்களெல்லாரும் ஆச்சரியப்பட, உடையவரும்,
‘என் பரமாசாரியரான ஆளவந்தார் வார்த்தை கொண்டு சொன்னேன் இது; ஆளவந்தார் கோஷ்டியிலே
ஒரு நாளாகிலும் சேவிக்கப் பெற்றேனாகில் பரமபதத்திற்கும் இதற்கும் சுருளும் படியும் கட்டிவிடேனோ?’
என்று அருளிச்செய்யும்படியான கல்வியின் பெருமை வாய்ந்த பெரியார். இவர் அருளிச்செய்த நூல்கள்
ஆகமப் பிரமாண்யம், புருஷநிர்ணயம், ஆத்துமசித்தி, தோத்திரரத்நம், கீதார்த்த சங்கிரகம்,
சதுஸ்லோகி என்பன.
ஈஸ்வரமுனிகள்
: இவர் ஸ்ரீமந்நாதமுனிகளுடைய திருக்குமாரர்; ஸ்ரீ ஆளவந்தாருக்குத் தமப்பனார். திருவாய்மொழிக்குத்
‘திருவழுதி நாடென்றும்’ என்ற தனியனை அருளிச்செய்தவர்.
|