பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
401

லாதவரன்றோ இவர்?’ என்று கூறியருளும்படியான ஞானச் செல்வர் இவர்.

    பெரியதிருமலை நம்பி : இவர், ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்; இராமாநுசருக்கும் எம்பாருக்கும் மாதுலர்; இராமாநுசருக்கு ஆசாரியருமாவர், இவரிடமே ஸ்ரீ ராமாயணத்தின் பொருள் கேட்டனர் இராமாநுசர். நம்பி திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு செய்துகொண்டு திருமலையிலேயே நித்தியவாசஞ் செய்தவர். இராமாநுசர் திருமலைக்கு எழுந்தருளிய காலத்தில் இவர் இராமாநுசரை எதிர்க்கொண்டு வந்து திருவேங்கடமுடையானுடைய தீர்த்தப் பிரசாதத்தை அவருக்குக் கொடுக்க, இராமாநுசரும் இவர் திருவடிகளிலே தண்டன் சமர்ப்பித்துத் ‘தேவரீர் எழுந்தருள வேண்டுமோ? வேறு சிறியவர் இலரோ?’ என்று விண்ணப்பஞ் செய்ய, ‘நாலு திருவீதிகளிலும் ஆராய்ந்து பார்த்தவிடத்திலும் என்னைக்காட்டிலும் சிறியவர்களைக் கண்டிலேன்! என்று விடை கூறிய பெரியார் இவர்.

    பெரியவாச்சான் பிள்ளை : இவர் நம்பிள்ளையினுடைய மாணாக்கர்; அவர் திருவருளுக்குப் பூரண பாத்திரமானவர்; திருவாய்மொழிக்கு இருபத்து நாலாயிரப்படி என்னும் வியாக்கியானத்தை அருளிச்செய்தவர்; திவ்வியப் பிரபந்தத்தில் மற்றை மூவாயிரங்கட்கும் வியாக்கியானம் அருளிச்செய்தவரும் இப்பெரியாரேயாவர். இவர் அவதரித்த ஊர், கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள சேங்கநல்லூர் என்பது. இவர் திருவரங்கத்திலேயே வாழ்ந்தவர்; ஸ்ரீ கிருஷ்ணபாதர், அபயப்பிரதானர் என்னும் வேறு திருப்பெயர்களும் இவருக்கு உண்டு. இவர் அருளிச்செய்த வேறு நூல்கள்; தனி ஸ்லோகி, பரந்த ரகசியம், மாணிக்கமாலை, நவரத்நமாலை, சகல பிரமாண தாத்பரியம், அபயப் பிரதான வியாக்கியானம், சரமரஹஸ்யம், அநுஸந்தான ரஹஸ்யம், நியமனப்படி என்பன.

   
பெரியாழ்வார் : இவர் தென்பாண்டிநாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலே, அந்தண வருணத்தில் வேயர் குலத்தில் அவதரித்து, விஷ்ணு சித்தர் என்ற திருநாமம் பெற்று விளங்கியவர்; ஆழ்வார்களுள் ஒருவர்; ஆண்டாளுக்குத் தமப்பனார். திருநந்தவனமுண்டாக்கித் திருமாலை கட்டுதல் முதலியதொண்டுகளைச் செய்து கொண்டு தம்மூர்த் திருமாலை இடையறாது வழிபட்டு வந்தவர். மதுரையில் ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியன் சமயவிசாரஞ்செய்வதில் பெருவிருப்புடையவனாய்ப் ‘பரமார்த்த தத்துவம் இன்னதென்பதை