பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
5

அருளிச்செய்த ‘கங்குலும் பகலும்’ என்கிற திருப்பதிகத்தில், ‘வடிவுடை வானோர் தலைவனே’ என்றதனால் முதன்மையும், ‘முன் செய்து இவ்வுலகம்’, ‘விண்ணோர் முதல்’ என்பனவற்றால் காரணமும், ‘கட்கிலீ,’ ‘என்னுடை ஆவி’ என்பனவற்றால் நிறைவும், ‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்,’ ‘மூவுலகாளி’ என்பனவற்றால் ஏவுதலும், ‘இவள் திறத்து அருளாய்’ என்றதனால் அருளும், ‘பற்றிலார் பற்ற நின்றானே’ என்றதனால் பற்றுக் கோடாதலும், ‘அலைகடல் கடைந்த ஆரமுதே’ என்றதனால் வரம்பில் ஆற்றலும், ‘என் திருமகள் மார்பனே’, நிலமகள் கேள்வனே,’ ‘ஆய்மகள் அன்பனே’ என்பனவற்றால் விரும்பியவாறே செய்து முடித்தலும், ‘இவ்வுலகமுண்டு உமிழ்ந்து அளந்தாய்’ என்றதனால் ஆபத்திற்குத் துணையாதலும், ‘முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்’ என்றதனால் துன்பத்தைத் துடைத்தலும் ஆகிய அப்பத்து அர்த்தங்களையும் அருளிச்செய்தாராதலின் ‘மதிள் அரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற ஆயிரமும்’ என்கிறார். இனி, ஆழ்வார்களுள் நம்மாழ்வார் அதிகர் ஆயினாற்போன்று, எம்பெருமான்களுள் நம்பெருமாள் அதிகராய் இருத்தலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார் என்றலுமாம்.

    பிரமேய சாரத்தைப் பெற்றாள் தேவகி; தன் மிடுக்காலே வளர்த்தாள் யசோதை; பிரமாண சாரத்தைப் பெற்றார் ஆழ்வார்; தம் மொய்ம்பால் வளர்த்தார் இராமாநுசர். ஆண்டவனிட்ட பயிரை வளர்த்தல் அடியானுக்குக் கடன் ஆதல் போன்று, ‘மாறன் அடி பணிந்து உய்ந்தவன்’ என்கிறபடியே, அடியாரான இராமாநுசருக்கு ஆழ்வார் பெற்ற திருவாய்மொழியை வளர்த்தல் கடன் ஆதலின், ‘வளர்த்த இதத்தாய் இராமாநுசன்’ என்கிறார். இராமாநுசர் கால முதற்கொண்டே திருவாய்மொழியின் ஏற்றம் குன்றின்மேல் இட்ட விளக்குப் போன்று எங்கும் பிரகாசித்தது என்க.                         

(5)

        மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
        தக்க நெறியும் தடையாகித் - தொக்குஇயலும்
        ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
        யாழினிசை வேதத் தியல்

 

1. ‘நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை, என்பர் அவரவர்தம்
  ஏற்றத்தால்’ என்ற உபதேசரத்தினமாலைச் செய்யுளை இங்கு நினைவு
  கூர்க.