பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
6

New Page 1

    பொ - ரை : ‘திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த யாழின் இசை போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் அறப்பெரிய இறைவனுடைய சொரூபத்தையும், என்றும் நிலைத்துள்ள ஆத்துமாவின் சொரூபத்தையும், அவனை அடைவதற்குத் தக்கதான வழியின் தன்மையினையும், தடையாகிச் சேர்ந்து கிடக்கின்ற முன்னை வினைகளாகிற விரோதி சொரூபத்தையும், வாழ்வாகிற மோட்சத்தின் தன்மையினையும் கூறுவனவாம்’ என்றவாறு.

    ஸ்ரீமந் நாராயணனே அறப்பெரிய முதல்வன். ஆத்துமாவிற்குச் சொரூபம் ‘அடியேன்’ என்பதே சரணாகதியே இறைவனைப் பெறுவதற்கு உரிய வழி. ‘பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்குடம்பும்’ ஆகிய இவையே விரோதிகள். ‘ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதுவே’ பரம புருஷார்த்தம் என்னும் இவவைந்து பொருள்களுமே திருவாய் மொழியிற்சொல்லப்படுகின்றன என்றபடி. இதன் விரிவை அவதாரிகை ‘திருமகள் கேள்வன் ஒன்றில்’ காண்க.                        

(6)

மணவாள மாமுனிகள் அருளிச்செய்த
திருவாய்மொழி நூற்றந்தாதியின் தனியன்கள்

         அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
        சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் - நல்ல
        மணவாள மாமுனிவன் மாறன் மறைக்குத்
        தணவாநூற் றந்தாதி தான்.

        மன்னும் புகழ்சேர் மணவாள மாமுனிவன்
        தன்னருளால் உட்பொருள்கள் தம்முடனே - சொன்ன
        திருவாய் மொழிநூற்றந் தாதியாந் தேனை
        ஒருவாது அருந்துநெஞ்சே! உற்று.