பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
54

ஸ்ரீ

ஈடு - மஹாப்பிரவேசம் - திருமகள் கேள்வன் - மூன்று

    1திருகமள் கேள்வனாய், அடையப்பட்ட எல்லா விருப்பத்தையும் உடையவனாய், மங்களம் பொருந்திய எல்லாநற்குணங்களையும் உருவமாக உடையனான சர்வேஸ்வரன், ‘மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து’ என்கிறபடியே, தொடர்ந்து வருகிற பிறவிகளிலே தோள் மாறி நித்திய சம்சாரியாய்ப் போந்த இவரை ‘அடியை அடைந்து உள்ளந்தேறி ஈறு இல் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்’ என்று தம் திருவாயாலே அருளிச்செய்யலாம்படி முதலடியிலே விசேஷ கடாக்ஷத்தைச் செய்தருளினான்.

   
முதல் முன்னமே சித்தின் சொரூபமாதல், அசித்தின் சொரூபமாதல், இறைவன் சொரூபமாதல் அறியாதே இருக்கிற இவர்க்கு, அசித்து விடத் தக்கது என்னுமிடத்தையும், சித்தாகிய சேதனன் ஏற்றுக்கொள்ளத்தக்கவன் என்னுமிடத்தையும், இறைவனாகிய தான் ஏற்றுக்கொள்ளத்தக்க பொருள்களுள் உயர்ந்தவன் என்னுமிடத்தையும் அவன் தானே காட்டிக் கொடுக்கக் கண்டு, இறைவனுடைய அனுபவத்திற்கு இச்சரீர சம்பந்தம் தடையாய் இருக்கையாலே, அவனுடைய அனுபவத்திற்குத் தடையாக உள்ள இச்சரீர சம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேண்டும் என்று விரும்பினார், 2திருவிருத்தத்தில்; சம்சார சம்பந்தம் அற்று ஒரு தேச விசேஷத்திலே போனால் அனுபவிக்கக்கூடிய 3தன்னுடைய மேன்மையையும் நீர்மையையும் வடிவழகையும் இங்கே இருக்குங் காலத்திலேயே அனுபவிக்கலாம்படி தெளிநிலையைச் செய்து கொடுக்க, பரப்பு அற ஏழு திருப்பாசுரங்களால் அவ்வழகை அனுபவித்தார், திருவாசிரியத்தில்; இப்படி அனுபவித்த பொருளில் பொருளுக்குத் தகுதியான

 

1. திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும்
  இந்நான்கு பிரபந்தங்களிலும் ஆழ்வார்க்கு உண்டான நிலை வேறுபாட்டிற்கு,
  ஸ்ரீ பாதாழ்வானுடைய நிலையை உவமையாக எடுத்துக் காட்டுகின்ற
  முகத்தால் திருவாய்மொழி பத்தி யோகத்தின் முதன்மையைக் கூறுகின்றது
  என்று அருளிச்செய்யத் திருவுள்ளங்கொண்டு, ஆழ்வாருடைய ஞானாதிக்கிய
  உருவத்தின் சிறப்பினை மீண்டும் அருளிச் செய்கிறார், ‘திருமகள்
  கேள்வனாய்’ என்று தொடங்கி.

2. ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று தொடங்கி, ‘அழுந்தார்
  பிறப்பாம், பொல்லா அருவினை மாய வன்சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே’
  என்று முடிக்கையாலே, திருவிருத்தத்திற்கு இதுவே முக்கியமான கருத்து
  என்று தெளிக.

3. ‘தன்னுடைய மேன்மையையும் நீர்மையையும் வடிவழகையும். . .அனுபவித்தார்’
  என்றது, ‘செக்கர் மாமுகில் உடுத்து’ முதலிய திருப்பாசுரங்களைத்
  திருவுள்ளம்பற்றி என்க.